Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உடுமலை நகராட்சியை முதன் முதலாக அ.தி.மு.க., கைப்பற்றுமா?

உடுமலை நகராட்சியை முதன் முதலாக அ.தி.மு.க., கைப்பற்றுமா?

உடுமலை நகராட்சியை முதன் முதலாக அ.தி.மு.க., கைப்பற்றுமா?

உடுமலை நகராட்சியை முதன் முதலாக அ.தி.மு.க., கைப்பற்றுமா?

ADDED : செப் 10, 2011 02:05 AM


Google News
உடுமலை : உள்ளாட்சிகளில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் அ.தி.மு.க., இதுவரை உடுமலை நகராட்சியை கைப்பற்றியதில்லை. ஆளுங்கட்சியாக இம்முறை களமிறங்கும் கட்சி வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே நிலவி வருகிறது. உடுமலை நகராட்சியின் முதல் தலைவர் நீதிக்கட்சியை சேர்ந்த கான் அப்துல் ரசாக் கான். 1918 ம் ஆண்டில் 12 வார்டுகளை மட்டும் உள்ளடக்கியதாக நகராட்சி இருந்து போது தலைவராக இவர் பொறுப்பு வகித்தார். பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த போதும் நீதிக்கட்சி வசமே உடுமலை நகராட்சி இருந்தது. காஜாமொகைதீன் சாய்ப் உட்பட சிலர் நகராட்சி தலைவராக பொறுப்பு வகித்தனர். 1942 ம் ஆண்டு நகராட்சி சுதந்திரா கட்சியின் வசம் சென்றது. அக்கட்சியை சேர்ந்த பழனிச்சாமி நகராட்சி தலைவராக இருந்தார். அதன்பின் நகராட்சியை தொடர்ந்து காங்., கைப்பற்ற துவங்கியது. இக்கட்சியின் குப்தா, வித்யாசாகர், ராமசாமி ஆகியோர் நகராட்சி தலைவர்களாக பதவி வகித்தனர். வித்யாசாகர் தலைவராக பதவி வகித்த போது நகரத்திற்கு முதன்முறையாக திருமூர்த்திமலையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. காங்., ஆதிக்கம் குறைந்த நிலையில், உடுமலை நகராட்சியை தி.மு.க.,வும், அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளுமே இதுவரை கைப்பற்றி வருகின்றன. தி.மு.க., வை சேர்ந்த பழனியப்பன், சாதிக்பாஷா, கனகராஜ் ஆகியோர் தலைவராக பொறுப்பு வகித்தனர். ஜனதாதளம் சார்பில் நடராஜ் நகராட்சி தலைவராக இருந்துள்ளார். அ.தி.மு.க., துவங்கப்பட்டு ஆளுங்கட்சியாக இருந்த காலங்களிலும் பல்வேறு காரணங்களினால், உடுமலை நகராட்சியை கைப்பற்ற முடியவில்லை. கடந்த மூன்று தேர்தல்களில் 1996 ல் தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., அடுத்த தேர்தலில் பா.ஜ., தற்போது நேரடியாக தி.மு.க., உடுமலை நகராட்சியில் வெற்றி பெற்று வந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் அ.தி.மு.க., சார்பில் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

பாரம்பரியம் மிக்க உடுமலை நகராட்சியை முதன்முதலாக கைப்பற்ற வேண்டும் என அ.தி.மு.க., தொண்டர்களிடையே அதிகளவு ஆர்வம் உள்ளது. ஆனால், நிர்வாகிகள் தரப்பில் தற்போது நிலவி வரும் 'பனிப்போர் கோஷ்டிகள்' தொண்டர்களின் எதிர்பார்ப்பிற்கு தடை போடுவதாக உள்ளது. உடுமலை நகர வளர்ச்சிக்காக கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், மக்களிடையே நிலவி வரும் அதிருப்திகளை வெளிக்கொண்டு வர எந்த நிர்வாகிகளும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற காரணங்களினால் இம்முறையும் நகராட்சியை அ.தி.மு.க., கோட்டை விடும் வாய்ப்புள்ளதாக கட்சி தலைமைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

உடுமலை, குடிமங்கலம் பகுதியில் கடந்த தேர்தலில் ஒன்றிய குழு, ஊராட்சிகள், பேரூராட்சி போன்ற உள்ளாட்சிகளில் அ.தி.மு.க., ஆதிக்கம் செலுத்திய போதும் நகராட்சியை கைப்பற்ற முடியாமல் போனதற்கு நிர்வாகிகளின் நடவடிக்கைகளே காரணம் என புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது, கட்சியில் நிலவி வரும் கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உடுமலை நகராட்சியை கைப்பற்றி அ.தி.மு.க., வரலாற்றை மாற்றியமைக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தயாராகுமா தி.மு.க.,: உடுமலை நகரம் தங்களது கோட்டை என தெரிவித்து வந்த தி.மு.க., வினருக்கு கடந்த எம்.பி., மற்றும் சட்டசபை தேர்தலில் நகர மக்கள் போதிய ஆதரவு அளிக்கவில்லை. நகரத்தில் ஓட்டு வங்கி சரிந்த போதும் நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. உடுமலை நகராட்சியில் பாரம்பரியத்தை தொடர சிறுபான்மை இனத்தை சேர்ந்தவரை முன்னிறுத்தி வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us