/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகர் நல அலுவலர் மீது குற்றச்சாட்டு நகராட்சி கூட்டத்தில் குரல்நகர் நல அலுவலர் மீது குற்றச்சாட்டு நகராட்சி கூட்டத்தில் குரல்
நகர் நல அலுவலர் மீது குற்றச்சாட்டு நகராட்சி கூட்டத்தில் குரல்
நகர் நல அலுவலர் மீது குற்றச்சாட்டு நகராட்சி கூட்டத்தில் குரல்
நகர் நல அலுவலர் மீது குற்றச்சாட்டு நகராட்சி கூட்டத்தில் குரல்
ADDED : ஜூலை 31, 2011 03:03 AM
பொள்ளாச்சி : 'நகராட்சி கவுன்சிலர்களை, நகர் நல அலுவலர் அவமரியாதையாக
நடத்தினார்' என குற்றம் சாட்டப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில்
கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதங்கள்: அண்ணாதுரை
(ம.தி.மு.க.,): நகராட்சி சுகாதாரப் பிரிவுக்குள் கவுன்சிலர்கள் வரக்கூடாது
என, நகர் நல அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்காக, பிறப்பு சான்று
வாங்க சென்றபோது, நகர் நல அலுவலர் அவமரியாதையாக நடந்துக் கொண்டார்.
ரங்கநாதன் (தி.மு.க.,): அரசு அலுவலகத்துக்குள் வரக்கூடாது என சொல்ல, நகர்
நல அலுவலருக்கு, யார் அதிகாரம் வழங்கியது?. கவுன்சிலருக்கு அவமரியாதை
ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவுதமன் (தி.மு.க.,):
பிறப்பு, இறப்பு சான்று வழங்க, நகராட்சியில் பல நாட்களாக
இழுத்தடிக்கின்றனர். நகர் நல அலுவலரின் செயல்பாடால் நகராட்சிக்கு அவப்பெயர்
ஏற்படுகிறது.
தலைவர் ராஜேஸ்வரி: அவமரியாதையாக நடந்துக் கொண்டதும், கவுன்சிலர்களை
அலுவலகத்துக்குள் வரக்கூடாது என்று சொன்னதும் தவறு.நகர் நல அலுவலர்
குணசேகரன்: கவுன்சிலர்கள் யாரையும் நான் அவ்வாறு சொல்லவில்லை. எதுவாக
இருந்தாலும் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து சொல்லுங்கள் என்று தான்
சொன்னேன். கமிஷனர் பூங்கொடி அருமைக்கண்: நகர் நல அலுவலர் அப்படி
சொல்லியிருந்தால் வருந்தத்தக்கது. எழுத்து மூலமாக எழுதி கொடுங்கள்
நடவடிக்கை எடுக்கப்படும்.குருசாமி (அ.தி.மு.க.,): நகராட்சியில் பிறப்பு,
இறப்பு பதிவு செய்து, ஒரே நாளில் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல், காலையில்
விண்ணப்பம் கொடுப்பவர்களுக்கு மாலையில் சான்று வழங்க வேண்டும்.மணி
(காங்.,): நகராட்சியில் ஒவ்வொரு செக்ஷனிலும், தனியார் ஆட்களுக்கு சொந்தமாக
சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளனர். கவுன்சிலர்களை அலுவலகத்துக்குள்
வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரிகள், அரசு அனுமதியின்றி தனியார் ஆட்களை
வேலைக்கு வைக்கலாமா?.லிங்கபாண்டி, மீனாட்சி (காங்.,): கால்நடைகளின்
நடமாட்டம், சாலைகளில் அதிகரித்துள்ளது; இதனால் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
மணி (காங்.,): பஸ் ஸ்டாண்ட் சாலையில், மக்களுக்காக சுரங்க நடைபாதை
கட்டப்பட்டது. ஆனால், வர்த்தக நிறுவனத்தினர், சுயநலத்துடன் சென்டர் மீடியனை
உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர். கண்ணன் (தி.மு.க.,): நகராட்சி பள்ளி
இடம், அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும் என, ஆர்.டி.ஓ., கூட்டத்தில்
தலைவர் தெரிவித்தார்; அதே போன்று வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
துணைத் தலைவர் கிருஷ்ணகுமார்: ஜோதிநகர், குறிஞ்சி நகரில் பூங்காவுக்கு
ஒதுக்கப்பட்ட இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நகராட்சி இடத்தை மீட்டு,
விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பல
விவாதங்கள் நடந்தன.முதல்வருக்கு வாழ்த்து: நகராட்சி கூட்டத்தில்,
அ.தி.மு.க.,வை சேர்ந்த துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், ''மூன்றாவது முறையாக
முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெ.,வுக்கு, வாழ்த்து தெரிவித்து தீர்மானம்
நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். தி.மு.க., கவுன்சிலர் கவுதமன், ''12வது
முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வான கருணாநிதிக்கு, வாழ்த்து தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி,
முதல்வர் ஜெ., முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு வாழ்த்து
தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்.