Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/என்.எச்., 209 சாலையில் அதிகரிக்கும் நெரிசல் விமோசனம் எப்போது? அதிகாரிகள் குறட்டை

என்.எச்., 209 சாலையில் அதிகரிக்கும் நெரிசல் விமோசனம் எப்போது? அதிகாரிகள் குறட்டை

என்.எச்., 209 சாலையில் அதிகரிக்கும் நெரிசல் விமோசனம் எப்போது? அதிகாரிகள் குறட்டை

என்.எச்., 209 சாலையில் அதிகரிக்கும் நெரிசல் விமோசனம் எப்போது? அதிகாரிகள் குறட்டை

ADDED : ஆக 21, 2011 11:52 PM


Google News
கோவை : கோவைபொள்ளாச்சி ரோட்டில், கோவை நகருக்குள் உள்ள பகுதியை அகலப்படுத்தாத காரணத்தால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும், விபத் துகளும் அதிகரித்து வருகின்றன. கோவை நகரின் வழியாக 3 தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. இவற்றில், சேலம்கொச்சிதிருவனந்தபுரம்கன்னி யாகுமரி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.47), தற்போது நகரின் வழியாகச் செல்லாமல், நீலம்பூர்பைபாஸ் வழியாக கோவையைக் கடந்து செல்கிறது. இந்த ரோட்டை, தேசிய நெடுஞ்சாலைஆணையம் 847 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தி வருகிறது. மற்றொரு தேசிய நெடுஞ்சாலையான, நாகைகூடலூர்மைசூர் தேசிய நெடுஞ்சாலை (என். எச்.67), கோவை நகரில் திருச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு என 2 முக்கிய இணைப் புச் சாலைகளும் கடந்த ஆட்சியின்போது சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டன; இதில், மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்கப்பணி மட்டும் இழுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், மற்றொரு தேசிய நெடுஞ்சாலையான திண்டுக்கல்சத்திபெங்களூரு (என்.எச்.209) தேசிய நெடுஞ்சாலையின் நிலைதான், மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. கோவையில் ஊடுருவிச் செல்லும் 3 தேசிய நெடுஞ்சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள ஒரே ரோடு இது மட்டுமே. மற்ற 2 தேசிய நெடுஞ்சாலைகளும் ஆணையம் வசமுள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை, கோவை நகரில் பொள்ளாச்சி ரோடு மற்றும் சத்தி ரோடு என 2 முக்கியச் சாலைகளை உள்ளடக்கியதாகவுள்ளது. இவ்விரு ரோடுகளுமே தற்போது இரு வழிச்சாலைகளாக உள்ளன. கோவையிலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி ஆகிய நகரங்களுக்கும், அன்னூர், சத்தியமங்கலம் நகரங்களுக்கும், இந்த தேசிய நெடுஞ்சாலைதான் முக்கிய வழித்தடம். இவற்றைத் தவிர்த்து, குறிச்சி, குனியமுத்தூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, குரும்பபாளையம், கீரநத்தம் உள்ளிட்ட பல்வேறு புறநகரப்பகுதிகளுக்கும் இவ்விரு சாலைகளுமே பிரதான வழித்தடங்களாகவுள்ளன. இதனால், இந்த ரோடுகளில் பகல், இரவு என எல்லா நேரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிலும், பொள்ளாச்சி ரோட்டின் நிலைமை படுமோசமாகவுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரையிலான ரோடு, கேரளா செல்லும் வாகனங்களுக்குமான வழித்தடமாகவும் இருப்பதால், இந்தப் பகுதியைக் கடந்து செல்வது, தினசரிப் போராட் டமாகவுள்ளது. இதனால், ஏராளமான நேர விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. இந்த ரோட்டில், 'சென்டர் மீடியன்' அமைத்து, விளம்பர வருமானம் பார்ப்பதைத் தவிர, தேசிய நெடுஞ்சாலைத்துறை எந்த வேலையையும் செய்வதேயில்லை. 'தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த ரோட்டை விரைவில் எடுத்துக்கொள்ளும்' என்று கூறியே, காலம் கடத்தி வருகிறது. ஆய்வு செய்வதாகக் கூறி, ஆண்டுகளை விழுங்கி வருகிறது ஆணையம். இதனால், இந்த ரோட்டைப் பயன்படுத்தும் வாகனதாரர்களும், பொதுமக்களும் படும் துயரம் கொஞ்ச நஞ்சமில்லை. குறைந் தபட்சமாக, உக்கடம்ஆத்துப்பாலம் வரையிலான ரோட்டையும், குறிச்சி குளத்தை ஒட்டிய ரோட்டையும் அகலப்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வலுத்துள்ளது. குறிச்சி குளத்துக்கு எதிர்புறத்தில் நிலத்தை அகலப்படுத்தினால், 4 வழிச்சாலை அமைக்க முடியும். அதேபோல, உக்கடம்ஆத்துப்பாலம் ரோட்டிலும் குளக்கரைக்கு எதிரில் பெரிய கட்டடங்கள் எதுவுமில்லை; அரசு முயன்றால் அங்கும் நிலம் கையகப்படுத்தலாம். ஆனால், இந்த ரோட்டை அகலப்படுத்த மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் நிதி ஒதுக்க வாய்ப்பேயில்லை. எனவே, மத்திய அரசிடம் சிறப்பு நிதி வாங்கியோ அல்லது தமிழக அரசின் நிதியிலோ இந்த ரோட்டை அகலப்படுத்தும் பணியை, மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டும். காலம் தாமதிக்காமல் இப்பணியை இப்போதே துவக்கினால்தான், இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளிலாவது நிறைவு செய்யமுடியும். கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என பல ரோடுகளும் அகலப்படுத்தப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில், இந்த இரண்டு ரோடுகளை அகலப்படுத்துவதற்காவது நடவடிக்கை எடுத்தால்தான், எதிர்காலத்தில் கோவை மக்களிடம் அ.தி.மு.க., வினர் நம்பிக்கையோடு ஓட்டுக்கேட்டு ஊருக்குள் வரமுடியும்.

குளக்கரையில் ரோடு :உக்கடம்ஆத்துப்பாலம் இடையிலுள்ள ரோட்டை அகலப்படுத்துவதற்குப் பதிலாக, உக்கடம் பெரிய குளத்தின் கரையில் ஒரு வழிச்சாலையையும், தற்போதுள்ள ரோட்டை மற்றொரு வழிச்சாலையாகவும் மாற்றி அமைக்கலாமா என்பது பற்றி, மாநில நெடுஞ்சாலைத்துறையின் புலனாய்வு பிரிவு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வுக்குப் பின் தரப்படும் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த ரோட்டின் எதிர்காலம் முடிவு செய்யப்படுமென்று தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us