ADDED : ஜூலை 11, 2011 11:29 PM
திரிசூலம் : நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரி, விமான நிலைய ஆணைய சங்கம் சார்பில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று துவங்கியது.
சென்னை விமான நிலைய ஆணையத்தில், நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு, கடந்த 2007ம் ஆண்டு முதல் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து, டில்லியில் உள்ள தலைமையகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இருப்பினும், மண்டல நிர்வாக இயக்குனர் அலுவலகம், இந்த பதவி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரியும் விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது. விமான நிலைய ஆணைய வளாகத்தில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில், தென்மாநில விமான நிலைய ஆணைய ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.