Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது

UPDATED : ஆக 12, 2011 12:45 AMADDED : ஆக 11, 2011 11:16 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விமர்சனம் செய்துள்ள கோத்தபய ராஜபக்ஷேக்கு, இந்தியத் தூதர் மூலம், மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, தமிழக அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

'இலங்கை உள்நாட்டுப்போரில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க, ஐ.நா., சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என, கடந்த ஜூன் 8ம் தேதி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் சகோதரரும், ராணுவத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்ஷே விமர்சனம் செய்து பேட்டியளித்தது குறித்து, சட்டசபையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விவாதத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவர் சவுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன், புதிய தமிழகம் உறுப்பினர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி உறுப்பினர் தமிழரசன் ஆகியோர் பேசினர். 'தமிழக அரசின் தீர்மானத்தை கிண்டல் செய்த இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக, தமிழக முதல்வர் தீர்மானத்தை கொண்டுவரவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, முதலில் மத்திய அரசை ஏற்கச் செய்ய வேண்டும்' என, உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இலங்கை உள்நாட்டுப்போரில், இனப் படுகொலை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளி என அறிவிக்க, ஐ.நா., சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கிடைக்கும் வரை, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், கடந்த ஜூன் 8ம் தேதி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரியவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்குத் தயார் என, இலங்கை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் பேட்டி அளித்து வருவது, செய்த தவறை, மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை, சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது தான், இதுபோன்ற பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபக்ஷேக்கு அளித்திருக்கிறது என்ற சந்தேகம், நடுநிலையாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

நியாயம் கிடைக்கும் வரை அரசு ஓயாது: இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கும் கிடைக்கும் வரை, என் தலைமையிலான அரசு ஓயாது. தமிழர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை என் அரசு எடுக்கும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டியளித்துள்ள கோத்தபய ராஜபக்ஷேக்கு, இந்திய தூதர் மூலம், தன் கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். (முதல்வர்

கருணாநிதியின் கண்துடைப்பு நாடகங்கள் முதல்வர் பேசும்போது குறிப்பிட்டதாவது: 'அனைத்துக்கட்சி கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, எம்.பி.,க்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக்கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு' என, பல்வேறு வகையான கண்துடைப்பு நாடகங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்தியபோது, கோத்தபய ராஜபக்ஷே வாய் திறக்கவில்லை. ஆனால், நான் கொண்டுவந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்தளவிற்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை, சபை உறுப்பினர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டார்.

கோத்தபய ராஜபக்ஷே பேட்டிக்கு ஜெ., எதிர்ப்பு: ''அரசியல் ஆதாயத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றியதாக, கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஐ.நா., சபை அமைத்த மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, அரசியல் ஆதாயத்திற்காக நிறைவேற்றப்படவில்லை,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

'இலங்கை உள்நாட்டுப்போரில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க, ஐ.நா., சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என, கடந்த ஜூன் 8ல், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை ராணுவத் துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷே விமர்சனம் செய்தது குறித்து, சட்டசபையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதன் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: சட்டசபை தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில், இலங்கை ராணுவத் துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷே, தனியார் 'டிவி'க்கு பேட்டி அளித்திருப்பது, இலங்கை அரசு தான் செய்த தவறை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இந்த தீர்மானத்தை, நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவந்து நிறைவேற்றியதாக, கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஐ.நா., சபை அமைத்த மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, அரசியல் ஆதாயத்திற்காக நிறைவேற்றப்படவில்லை. சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் நடத்தப்படுகின்றனர் என்றும், மற்றவர்களை விட, தங்கள் நாட்டு குடிமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

மிகப்பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என, இலங்கை அரசு அறிவித்த பின்னரும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு இலங்கை ராணுவம் காரணமாக இருந்தது என்றும், ஐ.நா., குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளில் இருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது. 'இலங்கை கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோத்தபய ராஜபக்ஷே அறிவுரை கூறியுள்ளார். 'கச்சத்தீவிற்கு வந்து செல்லும் இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகளிடம், பயண ஆவணங்களையோ அல்லது நுழைவதற்கான அனுமதியையோ பெற வேண்டும் என இலங்கை அரசு கேட்காது' என, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் வேதம் ஓதுகிறது: இதை, பார்லிமென்டில் தெளிவுபடுத்தும் வகையில், இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என, அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டுவிட்டு, தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும், போர்க் குற்றவாளிகள் என தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டியளித்திருக்கிறார். போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணவோ, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எவ்வித நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. இவ்வாறு முதல்வர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us