/உள்ளூர் செய்திகள்/சென்னை/போலீஸ் துறையில் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்கள்போலீஸ் துறையில் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்கள்
போலீஸ் துறையில் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்கள்
போலீஸ் துறையில் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்கள்
போலீஸ் துறையில் அதிகரித்து வரும் காலிப் பணியிடங்கள்
ADDED : ஆக 21, 2011 02:06 AM
சென்னை : தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவில் போலீசார், எஸ்.ஐ., பணியிடங்கள் பெருமளவில் காலியாக உள்ளன. இவற்றை விரைவில் நிரப்பினால் குற்றங்களையும் பெருமளவில் குறைக்கலாம்; போலீசாரின் வேலைப் பளுவும் குறையும்.மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பாற்றி, சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டும் முக்கியமான பணியை செய்வதில் முக்கிய பங்காற்றி வருவது போலீஸ் துறை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், போலீஸ் வேலை என்றாலே, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பில்லாமல் இருந்தது. தற்போது போலீஸ் வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.போலீஸ் பணியிடங்கள் என்பது, மக்கள் தொகையின் அடிப்படையில், அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, 2004ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொதுமக்களில் 670 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதாச்சாரம் இருந்தது. ஆனால், 2010ம் ஆண்டு, அந்த விகிதாச்சாரம் குறைக்கப்பட்டு, 639 பேருக்கு ஒரு போலீஸ் என்ற அளவில் இருக்கும் வகையில், போலீசார் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது 772 பேருக்கு ஒரு போலீசார் என்ற விகிதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் நிலவரப்படி, தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட போலீசின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 532 பேர். இதில், டி.ஜி.பி.,க்கள் முதல் கடைநிலை காவலர் வரை அடக்கம். ஆனால், இருப்பதோ 88 ஆயிரத்து 218 பேர் மட்டுமே. 21 ஆயிரத்து 304 பேர் பற்றாக்குறை உள்ளது. தமிழக அரசின் சார்பில், சீருடை பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் கான்ஸ்டபிள்கள், எஸ்.ஐ.,க்களும், டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வின் மூலம் டி.எஸ்.பி.,க்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தவிர, மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., மூலம் ஐ.பி.எஸ்., பணிக்கு தேர்வாகுபவர்கள், எஸ்.பி.,யாக பணியமர்த்தப்படுகின்றனர். இது தவிர, தமிழக அரசால் தேர்வு செய்யப்படும் டி.எஸ்.பி.,க்கள் ஏ.டி. எஸ்.பி.,யாக, எஸ்.பி.,யாக பதவி உயர்வுகள் பெறுகின்றனர்.ஒரு பதவி நிலையில் இருப்பவர் ஓய்வு பெறும் போது, அதற்கடுத்த பதவி நிலையில் இருப்பவர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அடைகின்றனர். இவ்வாறாக ஓய்வும், பதவி உயர்வும் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நிகழ்வதால், குறிப்பிட்ட பதவிகளில் பற்றாக்குறை என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஜூன் மாதம் நிலவரப்படி சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள, போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் ஆண், பெண் இன்ஸ் பெக்டர்கள் பணியிடங்கள் 170ம், எஸ்.ஐ., பணியிடங்கள் 3,326ம், கான்ஸ்டபிள், கிரேடு 1 போலீஸ், தலைமை காவலர் பணியிடங்கள் 16 ஆயிரத்து 15ம், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில், 1,749 காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. போலீஸ் நிலையங்களை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் போலீசார் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் மட்டுமே, எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவுகளில் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் கடந்த இரண்டுமாதங்களுக்கு முன், 1800 போலீசாரும், 330 எஸ்.ஐ., பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரியவந்தது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் இருப்பவர்களின் வேலைப் பளுவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே கடந்தாண்டு தேர்வு செய்யப்படு பயிற்சியில் உள்ள 9000 போலீசாரில் 8500 பேர் பயிற்சி முடித்து சமீபத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், தமிழக அரசின் திருத்தப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், காலியாக உள்ள 896 எஸ்.ஐ., 121 தொழில் நுட்ப எஸ்.ஐ., மற்றும் 5,588 இரண்டாம் நிலை போலீஸ் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விரைவில் போலீசார் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து, பயிற்சித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,'' கடந்தாண்டில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 8500 பேர் பயிற்சி முடித்து, 2306 பேர் ஆயுதப்படையிலும், மீதமுள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் அதாவது பட்டாலியனிலும் ரிப்போர்ட் செய்துள்ளனர். ஆயுதப்படையில் புதிய போலீசார் சேரும் போது, அங்கிருப்பவர்கள் தாலுகா போலீசிற்கு மாற்றப்படுவார்கள். இதனால், போலீஸ் காலியிடங்கள் பெருமளவிற்கு குறைந்து விடும். தமிழக அரசின் அறிவிப்பின் படி புதிய போலீசார் தேர்வும் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த ஆறு மாதங்களில் அவர்களும் பயிற்சி முடித்து பணியில் சேரும் பட்சத்தில், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என்றார்.மேலும், தமிழக இடைக்கால பட்ஜெட்டில், 'கூடுதலாக தேவைப்படும் போலீசார் எண்ணிக்கை குறித்து, உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அப்பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தின் மக்கள் தொகை உயர்வுக்கேற்ப போலீசாரின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும் என தெரிகிறது.
நமது சிறப்பு நிருபர்