ADDED : ஜூலை 23, 2011 01:07 AM
மதுரை: குற்ற வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து தேனி எஸ்.பி., பிரவீன்குமார் அபிநபு மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜரானார்.
போலீஸ் நிலையாணை சட்டப்பிரிவுகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது. தேனி அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகி ராமுத்தாய் தாக்கல் செய்த மனு: சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றேன். அப்போது சிலர் என்னை தாக்கி, நகை, பணத்தை பறித்து கொண்டனர். அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தேன். இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்த போது, இன்ஸ்பெக்டர் சரியாக பதிலளிக்காததால், எஸ்.பி., ஆஜராக உத்தரவிடப்பட்டது. நேற்று மனு நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.காந்தி, கார்த்திகேயன் ஆஜராயினர். எஸ்.பி., ஆஜராகி கூறுகையில், ''ராமுத்தாய் புகாரில் பதிவான வழக்கு முடிக்கப்பட்டது,'' என்றார். நீதிபதி, ''ராமுத்தாய் காயமுற்றுள்ளார். அத்தகைய வழக்குகளில் போலீஸ் நிலையாணை சட்டம் 566 பிரிவின்படி நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?,'' என கேள்வி எழுப்பினார். பின் நீதிபதி, ராமுத்தாய் புகாரை வேறு ஒரு இன்ஸ்பெக்டர் மூலம் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.