PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM

ஓட முடியாத போலீஸ்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், பொதுமக்கள் - போலீஸ் நல்லுறவு மாரத்தான் தொடர் ஓட்ட போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கு பெற்றவர்கள், நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இதில், போலீசாரும் ஒரு குழுவில் பங்கேற்று ஓடினர். பொதுமக்கள் குழுவினர் பாய்ந்து ஓடினர். அவர்களுக்கு ஈடு கொடுத்து ஓட முடியாமல் போலீசார் திணறியதால், அவர்களை, பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களில் ஏற்றிக் கொண்டனர். இதைப் பார்த்து போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின், நடந்த நிறைவு விழாவில், முதுகுளத்தூர், டி.எஸ்.பி., மாதவன் பேசும்போது, 'எதிர்காலத்தில், போலீசார் முழு உடற்தகுதியுடன் உள்ளனரா என்பதை ஆய்வு செய்து, தேவையான பயிற்சி அளிக்கப்படும்' என்றார். இதையெல்லாம் பார்த்த பெரியவர் ஒருவர், 'பொதுமக்கள் கூடவே ஓட முடியாத நம்ம போலீஸ்காரங்க, திருடர்கள எப்படி ஓடி பிடிப்பாங்க' என கிண்டலடித்தார்.
போலீசுன்னா கிள்ளுக்கீரையா போச்சா?
வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு, ஒரே தவணையில் கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டனர். இதனால், மாலைநேரக் கல்லூரி மாணவ, மாணவியர், 'ஸ்டிரைக்' அறிவித்தனர். ஸ்டிரைக்கில், அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, கல்லூரி நிர்வாகம், போலீசுக்கு தகவல் கொடுத்தது. மாலையில் நடப்பதாக இருந்த, 'ஸ்டிரைக்'கிற்கு, காலை, 11 மணி முதல், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நின்றனர். மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சு நடத்தியதில், இரு தரப்பிலும் சுமுக முடிவு ஏற்பட்டது. 'ஸ்டிரைக்' வாபஸ் ஆனதால், போலீசாரை, கல்லூரி நிர்வாகம் திருப்பி அனுப்பியது. அப்போது, பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் ஒருவர்,'கல்லூரி நிர்வாகம், அப்பவே இதை செய்திருந்தால், நாங்க இப்படி வெயில்ல காய்ந்திருக்க வேண்டாம்.போலீசுன்னா இவங்களுக்கு கிள்ளுக்கீரையா போச்சு' என புலம்பி கொண்டே நடையை கட்டினார்.