/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தி.மு.க.,வினருக்கு இன்று துவங்குகிறது நேர்காணல் :மேயர் வேட்பாளராக 14 பேரிடையே போட்டிதி.மு.க.,வினருக்கு இன்று துவங்குகிறது நேர்காணல் :மேயர் வேட்பாளராக 14 பேரிடையே போட்டி
தி.மு.க.,வினருக்கு இன்று துவங்குகிறது நேர்காணல் :மேயர் வேட்பாளராக 14 பேரிடையே போட்டி
தி.மு.க.,வினருக்கு இன்று துவங்குகிறது நேர்காணல் :மேயர் வேட்பாளராக 14 பேரிடையே போட்டி
தி.மு.க.,வினருக்கு இன்று துவங்குகிறது நேர்காணல் :மேயர் வேட்பாளராக 14 பேரிடையே போட்டி
ADDED : செப் 20, 2011 01:00 AM
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ள தி.மு.க.,வினருக்கு இன்றிலிருந்து நேர்காணல் நடக்கவுள்ளது.
சட்டசபைத் தேர்தல் தோல்வி, நில அபகரிப்பு வழக்குகள், ஜாமின் மறுப்பு என பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில், தி.மு.க.,முக்கியப் புள்ளிகள் அல்லாடி வந்தாலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உள்ளாட்சித் தேர்தல் உற்சாகத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லை. காங்கிரசுடன் தேர்தல் உறவை முறித்துக் கொண்டு, தனித்துப்போட்டி என்று கருணாநிதி அறிவித்ததே, இந்த உற்சாகத்துக்குக் காரணம் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். இதனை முதலிலேயே அறிவித்திருந்தால் விருப்ப மனு கொடுப்போரின் எண்ணிக்கை, இன்னும் அதிகமாயிருக்கும் என்பது இவர்களின் கருத்து. கோவை மாவட்டத்தில், அ.தி.மு.க.,வை ஒப்பிடுகையில், தி.மு.க.,வில் விருப்ப மனு கொடுத்துள்ளோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. அ.தி.மு.க.,வில் கோவை மேயருக்கு விருப்ப மனு கொடுத்தவர்கள் 44 பேர்; தி.மு.க.,வில் 14 பேர் மட்டுமே. கோவை மாநகர தி.மு.க., செயலாளர் வீரகோபால், துணை மேயர் கார்த்திக், குறிச்சி நகராட்சித் தலைவர் பிரபாகரன், கவுண்டம்பாளையம் நகராட்சித் தலைவர் சுந்தரம் உட்பட 14 பேர், மேயருக்குப் போட்டியிடத் தயாராகவுள்ளனர். மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் போட்டியிட, அ.தி.மு.க.,வில் 1,100க்கும் அதிகமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்; தி.மு.க., வில், 100 வார்டுகளுக்கு விருப்ப மனு கொடுத்துள்ளோர் எண்ணிக்கை, 490 மட்டுமே. பொள்ளாச்சி நகராட்சித் தலைவருக்கு 12 பேரும், 36 வார்டுகளுக்கு 105 பேரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். வால்பாறை நகராட்சித் தலைவருக்கு 8 பேரும், அங்குள்ள 21 வார்டுகளுக்கு 70 பேரும், மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவருக்கு 8 பேரும், 33 வார்டுகளில் போட்டியிட 60 பேரும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலராகப் போட்டியிட 38 பேரும், யூனியன் கவுன்சிலர்க்கு 250 பேரும் விருப்ப மனு கொடுத்து விட்டு, நேர்காணலுக்குத் தயாராகவுள்ளனர். மாவட்டத்திலுள்ள 37 பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்குப் போட்டியிட 150 பேரும், கவுன்சிலராகப் போட்டியிட 1,300 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல், கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் இன்றிலிருந்து துவங்குகிறது. இன்று (செப். 20) கோவை மேயர் வேட்பாளருக்கான நேர்காணல் நடக்கிறது. நாளை (செப்.21) மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும், நாளை மறுநாள், நகராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கும், அடுத்தடுத்த நாட்களில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு மற்றும் பேரூராட்சிகளுக்கும் நேர்காணல் நடக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன், ராமநாதன், மாவட்டப் பொருளாளர் நாச்சிமுத்து உட்பட முக்கிய நிர்வாகிகள் இணைந்து, இந்த வேட்பாளர்களை நேர்காணல் செய்து, வேட்பாளர் பட்டியலை தலைமைக்கழகத்துக்கு அனுப்பவுள்ளனர். அநேகமாக, ஒரு வாரத்தில் வேட்பாளர் விபரம் தெரிந்து விடும்.


