Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி: கட்சிகள், மக்கள் மதிப்பீடு என்ன?

அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி: கட்சிகள், மக்கள் மதிப்பீடு என்ன?

அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி: கட்சிகள், மக்கள் மதிப்பீடு என்ன?

அ.தி.மு.க., அரசின் 100 நாள் ஆட்சி: கட்சிகள், மக்கள் மதிப்பீடு என்ன?

ADDED : ஆக 23, 2011 11:27 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.தி.மு.க., ஆட்சியில் அமர்ந்து, நேற்றுடன் 100 நாட்கள் முடிந்து விட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே, ரேஷனில் அரிசி இலவசம், ஏழைப் பெண்கள் திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயாக அறிவித்ததோடு, தங்கத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்குதல், முதியோர் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை 1,000 ரூபாயாக உயர்த்துதல், மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம் 4,000 ரூபாயாக உயர்த்துதல் என, அதிரடி சலுகைகளை முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கள் தமிழக மக்களிடையே அமோக ஆதரவைப் பெற்றன. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஏழைகளுக்கு 232 கோடி ரூபாயில் கறவை மாடு, ஆடு வழங்குதல், 1,250 கோடி ரூபாயில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், செப்.15 அன்று துவங்கும் என்றும் அறிவித்துள்ளது. 912 கோடி ரூபாயில், மாணவ, மாணவியருக்கு, 'லேப்-டாப்' வழங்கும் திட்டமும் நடைமுறைக்கு வரவுள்ளது. வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், 'பசுமைப் புரட்சி' திட்டத்தையும், தனது கொள்கை அறிவிப்பில், தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், முதல்வர் ஜெயலலிதா சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார். நில அபகரிப்பாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மிரட்டலுக்கு பயந்து நிலம், வீடுகளை இழந்தோர், மீண்டும் இடத்தை மீட்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இப்படி, அ.தி.மு.க., அரசு 100 நாள் ஆட்சியில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. சமச்சீர் கல்வி விவகாரத்தில் மட்டும் அரசின் முடிவு, சலசலப்பை ஏற்படுத்தியது. கோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதற்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க.,வின் 100 நாள் ஆட்சி குறித்து, அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் கருத்துக்கள்:

பண்ருட்டி ராமச்சந்திரன் (சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர்): புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு 100 நாட்களை எட்டியுள்ளது. தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், பல திட்டங்கள் இந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நல்ல ஆரம்பம் மிகப்பெரிய சாதனைக்கு வழிவகுக்கும் என்பதைப் போல, அ.தி.மு.க., அரசின் 100 நாள் நற்பணிகள், தமிழகத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என கருதுகிறோம். குறிப்பாக ஏழை, நடுத்தர மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில், இந்த அரசு முனைப்போடு செயல்படுகிறது. ஒரு எதிர்க்கட்சி என்பது, அரசு செய்யும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்பதல்ல. நல்ல திட்டங்களை செய்யும் போது, அதை வரவேற்பதும் எதிர்க்கட்சியின் கடமை. தே.மு.தி.க., அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., (மனிதநேய மக்கள் கட்சி): அ.தி.மு.க.,வின் 100 நாள் ஆட்சியில், மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியில், போலீசில் புகார் கொடுத்து நியாயம் கிடைக்காமல் தவித்து வந்தனர். இழந்த நிலம், உடைமைகளையும் மீட்டு வருகின்றனர். இதற்காக, தனிப் பிரிவை அரசு அமைத்துள்ளது, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை, தனி கவனத்துடன் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். சொன்னதை செய்யும் அரசு என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

வக்பு வாரியத்துக்கு அரசு அளித்து வரும் மானியத்தை, 45 லட்ச ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாயாக முதல்வர் உயர்த்தி உள்ளார். மேலும், வக்பு வாரிய ஊழியர் ஊதியத்தை சீரமைக்கவும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கவும், மூன்று கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது, சிறுபான்மையினர் நலனில் அரசின் அக்கறையை காட்டுகிறது. இதன் மூலம், இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நாஞ்சில் சம்பத்: (ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் ):ஆட்சி மாறியிருக்கிறது; காட்சி மாறவில்லை. மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியாது. நாட்டு மக்கள் எந்த சுமையால் கடந்த ஆட்சியில் அழுத்தப்பட்டார்களோ, அந்த சுமையிலிருந்து இன்னும் விடுபடவில்லை. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிகாரத்திற்கு வந்தவுடன், 'வழிப்பறி திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர்' என முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், அடுத்த நாளே பழ.கருப்பையா வீட்டில் வந்து நிற்கிறான் வழிப்பறி திருடன்.

சகல அதிகாரம் உள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம் வீட்டிலே தன் கைவரிசையை காட்டுகிறான். மதுரை மாநகரில் பா.ம.க., பொதுச்செயலர் இளஞ்செழியன் வெட்டிக் கொல்லப்படுகிறார். இத்தனைக்கும் அழகிரி ஊரில் இல்லை. விலைவாசி அம்புகள்,ஏழை மக்களை அன்றாடம் தைத்துக் கொண்டிருக்கிறது. அதிகாரம் மட்டத்தில் மாறுதல் என்பது அன்றாட நடவடிக்கையாகிவிட்டது. ஏழை மக்களுக்கு வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையும் எகிறிவிட்டது. இந்த ஆட்சியில் கிடைத்த ஒரே பலம் கருணாநிதியின் குடும்பம் அடைந்திருக்கிற அதிர்ச்சி மட்டும் தான். மொத்தத்தில் பழைய குருடி கதவை திறடி கதைதான்.

சி.மகேந்திரன்: (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலர்):அ.தி.மு.க., ஆட்சியில் சில வரவேற்கத்தக்க அம்சங்களும் உள்ளன. இலங்கை தமிழர்களின் பிரச்னையில் ஒரு குழப்பமற்ற தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி, மத்திய அரசிடம் வலியுறுத்தும், நிர்பந்திக்கும் ஒரு அரசியல் செயல்பாட்டை உருவாக்கி வைத்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை பெற்றுத்தருவதில் யாரோடும் சமரச போக்கு செய்து கொள்ள போவதில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். பட்ஜெட்டில் கிராமப்புற ஏழைகள், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவி செய்யும். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது. இலவச ஆடு, கறவை மாடுகளை பொருளாதாரத்தில், நலிந்த மக்களுக்கு வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேபோல் சமச்சீர்கல்வி விவகாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் தெளிவான திட்டத்தோடு அரசு செயல்பட்டிருக்கலாம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர்):அ.தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளில், பல விஷயங்களை அமலாக்கும் முயற்சித்து வருகிறது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. உணவு உற்பத்தியில் அதிக இலக்கு நிர்ணயித்திருப்பது போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். கடந்த தி.மு.க., ஆட்சியில் அமலாக்கப்பட்ட சில திட்டங்கள் பயனுள்ள திட்டங்களாக இருந்தால், அத்திட்டங்களையும் தொடர வேண்டும். அதில் குறைபாடுகள் காணப்பட்டால் புதிய திட்டத்தை கொண்டு வரலாம்.

கார்த்தி ப.சிதம்பரம் (அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்):அ.தி.மு.க., ஆட்சி மீது மக்கள் எதிர்ப்பார்ப்பு அதிகம். பொதுவாக எல்லா அரசிடமிருந்தும், மக்களின் எதிர்பார்ப்பு எல்லா காலக்கட்டத்திலும் அதிகமாகவே இருக்கும். எதிர்பார்ப்புகளை 100 நாட்களில் நிறைவேற்ற முடியாது. 100 நாட்கள் குறைவான காலகட்டம் என்பதால், அரசு பற்றி ஆக்கப்பூர்வமான தீர்ப்பு கூற முடியும் என்பது தவறு. அரசின் திட்ட அறிவிப்புகள் மூலம் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். அந்த வகையில் பல திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். திட்டங்களை அமல்படுத்திய பின் தான் ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன் வைக்க முடியும்.

பொதுமக்கள் கருத்து:

விஸ்வநாதன், சமூக ஆர்வலர், சிட்லப்பாக்கம்: அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகள் பாராட்டும்படியாகவே அமைந்துள்ளன. குப்பை அகற்றும் முயற்சி சிறப்பானது. முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று குப்பைகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது வரவேற்கக்கூடியது. ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.

ராமாராவ், லட்சுமிநகர் நலச் சங்கம், நங்கநல்லூர்: மக்கள் பிரச்னைகள், நீர்வழிகளை சீரமைப்பது போன்ற விஷயங்களில், அரசின் முயற்சி பாராட்டுக்குரியதாக உள்ளது. அதே நேரத்தில், படுமோசமாக உள்ள சாலைகளை சீரமைப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். உள்ளடங்கிய பகுதிகளுக்கு மினி பஸ் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விலைவாசி ஓரளவு குறைந்துள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உள்ளதைப் போல, அரசு அலுவலகங்களில் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு இத்தனை நாட்களில் தீர்வு; இல்லாவிட்டால் தண்டனை என்ற நிபந்தனை விதிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us