இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடிய சம்பவம் : சீனா மீது குற்றசாட்டு
இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடிய சம்பவம் : சீனா மீது குற்றசாட்டு
இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடிய சம்பவம் : சீனா மீது குற்றசாட்டு
பாஸ்டன் : இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசுகள், ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் என, மொத்தம் 72 அமைப்புகளின் இணையதளங்களுக்குள் புகுந்து, ரகசிய தகவல்களைத் திருடிய சம்பவங்களின் பின்னணியில் சீனா உள்ளதாக, கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.'இது மிகப் பெரிய அறிவுத் திருட்டு' என, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய, அமெரிக்க ராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணையதளங்களில், இணையத் திருடர்கள் புகுந்து சர்வசாதாரணமாக ரகசிய தகவல்களைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, இதன் பின்புலத்தில் ஒரு நாடு இருப்பதாக மட்டும் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல கணினி பாதுகாப்பு நிறுவனமான 'மெக் அபீ' (Mஞிஅஞூஞுஞு), இணையதளத் திருட்டுகள் குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 2006 முதல் இதுபோன்ற இணையதளத் திருட்டுகளில் ஈடுபட்டுள்ள நாடு, சீனாவாக இருக்கலாம் என, சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
'மெக் அபீ' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த இணையதளத் திருட்டுகள் 2006ன் நடுவில் துவங்குகின்றன. கிடைத்துள்ள ஆதாரங்களின்படி பார்த்தால், அதற்கும் முன்பே அது துவக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு சில திருட்டுகள் 28 மாதங்களுக்கு முன்னும், சில திருட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பும் கூட நடந்திருக்கின்றன.
சில 'வைரஸ்' உள்ள மெயில்கள் இந்த இணையதளங்களுக்கு வரும். தெரியாமல் அவற்றை திறந்து விட்டால் போதும், அதில் இருந்து வைரஸ் கணினிக்குள் புகுந்து, மறுபக்கம் உள்ளவர்கள், தகவல்களைத் திருட வழிவகுத்துக் கொடுத்து விடும்.
'மெக் அபீ' யின் துணைத் தலைவர் டிமிட்ரி அல்பெரோவிட்ச் கூறுகையில்,'இந்தத் திருட்டுகள் மூலம் ராணுவம், தொழில்துறை, தனியார் நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்கள், உயர் அதிகாரிகளுக்கு இடையிலான ரகசிய பேச்சுவார்த்தைகள் போன்ற தகவல்கள் திருடு போயுள்ளன. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறைதான் மிகப் பெரிய அறிவுத் திருட்டு நடந்துள்ளது' என்றார்.
இணையதளத் திருட்டுகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஜிம் லீவிஸ்,'மெக் அபீ' சுட்டிக் காட்டும் மிகச் சிறந்த நிபுணர்களில் ஒருவர். இதுகுறித்து லீவிஸ் கூறுகையில்,'பாதிக்கப்பட்டோர் வரிசையில் தைவான் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இரண்டும் இடம் பெற்றிருப்பதால், சீனா தான் இந்தத் திருட்டுகளை நடத்தியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது' என்றார்.
அமெரிக்காவின் ராணுவ ஒப்பந்ததாரர்கள் சிலரின் இணையதள விவரங்கள் திருடு போனது குறித்து 2009ல் 'மெக் அபீ' ஆய்வு செய்த போது, இந்த விவரங்கள் கிடைத்ததாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 'ஆபரஷேன் ஷேடி ஆர்.ஏ.டி.,' என 'மெக் அபீ' பெயரிட்டுள்ளது.
சீனாவின் இணையதளத் திருட்டால் பாதிக்கப்பட்டோர்
அரசுகள் : இந்தியா, அமெரிக்கா, அமெரிக்காவின் நெவேடா பகுதி அரசின் ஆயுள் காப்பீட்டுக் கூட்டமைப்பு, கனடா, தென்கொரியா, தைவான் மற்றும் வியட்நாம்.
சர்வதேச அமைப்புகள் : ஐ.நா., தென் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பு (ஏஷியான்), சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக போதை மருந்து எதிர்ப்பு ஏஜன்சி.
ஒப்பந்ததாரர்கள் : அமெரிக்காவின் 12 ராணுவ ஒப்பந்ததாரர்கள், பிரிட்டனின் 1 ராணுவ ஒப்பந்ததாரர்.
தனியார் நிறுவனங்கள் : கட்டுமானம், உருக்கு, எரிசக்தி, சூரிய சக்தி, தொழில்நுட்பம், செயற்கைக் கோள் தொடர்பு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பல தனியார் நிறுவனங்கள்.
இவையும் தவிர பல சிந்தனையாளர்கள், நிபுணர்கள்.
மத்திய அரசின் 117 துறைகளில் திருட்டு : இந்தாண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், மத்திய அரசின் 117 துறைகளின் இணையதளங்களில் திருட்டுகள் நடந்துள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் சச்சின் பைலட் நேற்று பார்லிமென்ட்டில் தெரிவித்தார். எங்கிருந்து தாக்குதல் நடந்தது, எதற்காக நடந்தது என்பவற்றை அறிவதற்காக, தாக்குதல் நடத்திய இணையதளத்தின் முகவரியைத் தரும்படி, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.