ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்யும் தொடர்மழையால் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்தாண்டு மே மாத இறுதியில் வழக்கம் போன்று மழை பெய்யத்துவங்கினாலும், மழை தீவிரமடையவில்லை. ஜூன் மாதம் துவங்கத்தில் லேசாக மழை பெய்து நின்று விட்டது. சோலையாறு அணையில் மட்டும் மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், இம்மாதம் துவக்கத்தில் இருந்து மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 150.59 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,116 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,428 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. சோலையாறு அணையில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்தால் முழுக்கொள்ளவும் நிரம்பி விடும். சோலையாறு அணையில் மொத்தம் 3,290 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். தற்போது 3,080 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில் 69.74 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,206 கனஅடி நீர்வரத்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 53 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. பரம்பிக்குளம் அணையில் 17,820 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்க முடியும். தற்போது 17,303 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. இரண்டு அடி நீர்மட்டம் உயர்ந்தால் பரம்பிக்குளம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில் 104.00 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 475 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து 182 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. திருமூர்த்தி அணையின் 60 அடி உயரத்தில் 33.95 அடி நீர்மட்டம் உள்ளது. அமராவதி அணையின் 90 அடி உயரத்தில் 46.63 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று காலை 8.00 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) : சோலையாறு- 28, பரம்பிக்குளம்- 32, மேல்நீராறு- 20, கீழ்நீராறு- 19, தூணக்கடவு- 2, பெருவாரிப்பள்ளம்- 2, வால்பாறை- 13, மணக்கடவு- 6, சர்க்கார்பதி- 3, மேல்ஆழியாறு- 2.