"அட்டாக்' பாண்டி மீது மூன்றாவது வழக்கு பாய்ந்தது :மாஜி எம்.எல்.ஏ., சகோதரர் வீட்டில் சோதனை
"அட்டாக்' பாண்டி மீது மூன்றாவது வழக்கு பாய்ந்தது :மாஜி எம்.எல்.ஏ., சகோதரர் வீட்டில் சோதனை
"அட்டாக்' பாண்டி மீது மூன்றாவது வழக்கு பாய்ந்தது :மாஜி எம்.எல்.ஏ., சகோதரர் வீட்டில் சோதனை
ADDED : ஜூலை 25, 2011 12:08 AM

மதுரை : மதுரையில் வீட்டை அபகரிக்க துணையாக இருந்ததாக, தி.மு.க., முன்னாள்
விவசாய விற்பனைக்குழுத் தலைவர் 'அட்டாக்' பாண்டி மீது நேற்று மத்திய
குற்றப்பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.
இதில்
தொடர்புடைய தி.மு.க., முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., முருகவேல்
சகோதரர் சக்திவேல், 38, வீட்டை போலீசார் சோதனையிட்டு, ஆவணங்களை பறிமுதல்
செய்தனர். மதுரை சொக்கிக்குளம் கல்பனா என்பவரது வீட்டை அபகரித்த வழக்கில்,
ஜூலை 16ல், 'அட்டாக்' பாண்டி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தெற்குவெளிவீதி எல்.ஐ.சி., அதிகாரி பிருத்விராஜ் வீட்டை அபகரித்ததாகவும்
பாண்டியை, அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கோவை
ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், மத்திய குற்றப்பிரிவு போலீசில்
புகார் செய்தார். அதில், உறவினர் ஷியாம்சுந்தர் என்பவர், தன்னிடம் வாங்கிய
பல லட்சம் ரூபாய் கடனுக்காக, கே.கே.நகரில் உள்ள ரூ.75 லட்சம் மதிப்புள்ள
வீட்டை கிரைய பத்திரம் எழுதிக் கொடுத்தார். பின், இந்த வீட்டை மதுரை துணை
கலெக்டர் காலனியில் உள்ள சக்திவேல் என்பவரது உறவினருக்கும் எழுதிக்
கொடுத்தார். இதையறிந்து நான் அங்கு சென்றபோது, 'அட்டாக்' பாண்டியின்
துணையுடன் ஷியாம்சுந்தரும், சக்திவேலும் மிரட்டினர். தற்போது அந்த வீட்டை
ஒத்திக்கு விட்டுள்ளனர், என தெரிவித்துள்ளார். அட்டாக் பாண்டி உட்பட
மூவரும் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 406(நம்பிக்கை
மோசடி), 448 (அத்துமீறி நுழைதல்), 506/2 (கொலை மிரட்டல்), 387 ( மரணம்,
காயம் ஏற்படுத்துவதாக அச்சுறுத்தல்) உட்பட 6 பிரிவுகளின்கீழ், இன்ஸ்பெக்டர்
பெத்துராஜ் வழக்கு பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தார். முன்னாள்
எம்.எல்.ஏ., முருகவேலின் சகோதரரான சக்திவேல், மதுரை விவசாய விற்பனை
பிரிவில் உதவி பொறியாளராக இருந்தவர். தற்போது, தூத்துக்குடியில்
பணியாற்றுகிறார். மதுரை கே.கே.நகர் பூங்கா எதிரேயுள்ள இவரது வீட்டில்
போலீசார் நேற்று ஒரு மணி நேரம் சோதனையிட்டு, அதற்கான ஒத்தி ஆவணத்தை
கைப்பற்றினர். மேலும், திருச்சி சிறையில் உள்ள 'அட்டாக்' பாண்டியை கைது
செய்து, மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். ஷியாம்சுந்தரை தேடி
வருகின்றனர். பாண்டி மீது புகார்கள் தொடர்ந்து வருவதால், குண்டர்
சட்டத்தில் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.