Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தினம் தினம் நடக்கும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி

தினம் தினம் நடக்கும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி

தினம் தினம் நடக்கும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி

தினம் தினம் நடக்கும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி

ADDED : ஆக 28, 2011 01:14 AM


Google News

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், சேலத்தில் மட்டும் தினம் தினம் நடக்கும் திருட்டு, வழிப்றி, கொள்ளை சம்பவங்களால், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய சேலம் போலீஸாரின், 'லட்சணம்' அம்பலத்துக்கு வந்துள்ளது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சுனில்குமார் சிங் மாற்றப்பட்டு, ஜூலை11ல் புதிய கமிஷனராக சொக்கலிங்கம் பதவி ஏற்றார். புதிய கமிஷனராக பதவி ஏற்ற சொக்கலிங்கம், நகரில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் நடவடிக்கையில் இறங்குவார், என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், புதிய கமிஷனர் பொறுப்பெற்றதும் நிலைமை மோசமானது.

சேலம் அங்கம்மாள் காலனி நிலவிவகாரம், பிரிமியர் ரோலர் மில் நில அபகரிப்பு வழக்கில் வி.ஐ.பி., குற்றவாளிகளான மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், கௌசிக பூபதி, சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன், பிரபல ஜவுளிக் கடை அதிபர்களை கைது செய்யாமல் இருக்க, பல லட்சம் ரூபாய் போலீஸ் அதிகாரிகளுக்கு கை மாறியதாக பரபரப்பு குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் தான் மாஜி அமைச்சர் போலீஸில் சரண்டர் ஆன போது, ராஜமரியாதை வழங்கி போலீஸார் விசுவாசத்தை காட்டியதாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து தமிழக முதல்வரையே தி.மு.க.,வினர் ஆபாசமாக சித்தரித்து நடுரோட்டில் நாடகத்தையே நடித்துக் காட்டி அரங்கேற்றினர். இதன் எதிரொலியாக, சேலம் மாநரில் உயர் அதிகாரி உட்பட, 59 பேரை அதிரடியாக பணி மாற்றம் செய்தது அரசு. ஆனால், இந்த பணி மாற்றத்துக்கு பின்னும் மாஜியின் உதவியாளர் கௌசிகபூபதியை கைது செய்ய போலீஸார் தொடர்ந்து திணறி வருகின்றனர்.



தி.மு.க.,வினரை கைது செய்ய, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வந்த போலீஸார், மாநகரில் முழுமையாக சட்டம் ஒழுங்கை காப்பாற்றியிருக்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. ஜூலை11ம்தேதி துவங்கி, ஆகஸ்ட் 25ம் தேதிவரை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு என, 39 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், தங்க நகைகள், மொபட், வீட்டு உபயோக பொருட்கள் என, 25 லட்சரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிபோய் உள்ளன.



ஜூலை 19ல் சேலம் சங்கர் நகரில், பிருந்தாகுமரி என்பவரிடம் இருந்து எட்டு பவுன் நகை பறிப்பு, ஆகஸ்ட் 10ல் திருச்சி மெயின்ரோடு ஜவுளிக் கடை பஸ் ஸ்டாப் அருகில், கிருஷ்ணராஜ் என்பவரிடம் இரண்டு பவுன் செயின் பறிப்பு, 15ம் தேதி ஃபேர்லேண்ட்ஸில் பொன்னுத்தாய் என்பவரிடம் இரண்டு பவுன் செயின் பறிப்பு, 19ம் தேதி சேலம் கான்வென்ட் ரோட்டில், மைதிலி என்பவரிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு, 22ம் தேதி இரவில், அம்மாபேட்டை அருணாசல தெருவில், மலர்விழி என்ற பெண்ணிடம் நான்கு பவுன் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில், பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி நகரில், 11 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.



திருட்டு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களும் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி, சேலம் சின்னத்திருப்பதியில், உமா என்பவரின் வீடு புகுந்து, 1.05 லட்சம் மதிப்புள்ள ஏழு பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. பிரகாஷ் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் வீட்டில், 2.55 லட்சம் மதிப்புள்ள, 17 பவுன் நகை திருடப்பட்டது உட்பட, 23 சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், தங்க நகைகள், மொபட், வீட்டு உபயோக பொருட்கள் என, 25.78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிபோய் உள்ளன. கொள்ளை, வழிப்பறி சம்பவங்களுக்கு இணையாக, நகரில் கொலை சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகள் கைது, திருட்டு பொருட்கள் மீட்பு நடவடிக்கை, ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.



மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது நடவடிக்கையில் துவங்கி, அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் போடப்பட்ட, 'புட்டப் கேஸ்' வரை அனைத்து சம்பவங்களும், சேலம் மாநகர போலீஸாரின் நடவடிக்கையில் கறுப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நகரில், 11 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டாலும், நகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர். புறநகர் பகுதியில், 33 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி மட்டுமே உள்ளார். இருப்பினும், மாநகரை விட புறநகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டுக்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.



சேலத்தில், 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருந்தாலும் அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டிய ஒரு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மற்றவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதால், பதுங்கி பாய நினைக்கும் அதிகாரி கூட, பூனை போல செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திறமையான அதிகாரிகள் இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் சுதந்திரமாக செயல்பட அதிகாரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், சேலத்தில் மட்டும் தினமும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை என அரங்கேற்றி வருவது, போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றவாளிகள் நம்புவது தான். சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை ஒழிக்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., சாதிக்க வேண்டும் என்றால், சேலம் மாநகர போலீஸில் நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.



-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us