Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெருங்குடி குப்பை கிடங்கால் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாழ்

பெருங்குடி குப்பை கிடங்கால் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாழ்

பெருங்குடி குப்பை கிடங்கால் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாழ்

பெருங்குடி குப்பை கிடங்கால் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் பாழ்

ADDED : ஆக 23, 2011 11:45 PM


Google News
துரைப்பாக்கம்:பெருங்குடி குப்பை கிடங்கின் கைங்கர்யத்தால், துரைப்பாக்கத்தின் நிலத்தடி நீர் ரசாயனம் கலந்து நிறம்மாறி, உவர் தன்மையுடன் உள்ளது. நிலத்தடி நீரை எவ்வித உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீருக்காக, பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.

சென்னை, ராஜிவ்காந்தி சாலையில் அமைந்துள்ளது துரைப்பாக்கம் ஊராட்சி. அங்கு 60க்கும் மேற்பட்ட நகர்களும், நூற்றுக்கணக்கான தெருக்களும் உள்ளன.

தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துரைப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். ஐ.டி., காரிடார் வரவுக்கு பின், இப்பகுதி அசுர வளர்ச்சியடைந்துள்ளது.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான சாப்ட்வேர் நிறுவனங்கள் பெருகியுள்ளன. அதன் காரணமாக, துரைப்பாக்கத்தில் குடியேறும் மக்கள் தொகையும் இருமடங்கு உயர்ந்தது. துரைப்பாக்கத்தில் வசித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் தண்ணீர் போதிய அளவில் இல்லை.

தண்ணீர் பற்றாக்குறை:சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் ஒரு தனி மனிதனின் சராசரி தண்ணீர் மற்றும் குடிநீர் தேவை குறைந்த பட்சம் 135 லிட்டர். அதன்படி துரைப்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நாள் ஒன்றுக்கு 54 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.அரசின் உத்தரவுப்படி, நிலத்தடி நீரை கணக்கில் கொண்டு நாள் ஒன்றுக்கு மாநகராட்சியில் 110 லிட்டர்; நகராட்சியில் 90 லிட்டர்; பேரூராட்சியில் 70 லிட்டர் மற்றும் ஊராட்சியில் 40 லிட்டர் என தண்ணீர் வழங்கப்பட வேண்டும். அதன் படி, துரைப்பாக்கம் ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு 16 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்த ஊராட்சி சார்பில் எட்டு லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.நிலத்தடி நீர் பாதிப்பு: துரைப்பாக்கத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் மற்ற ஊராட்சிகளை போல தேவையான நிலத்தடி நீர் இருந்தாலும், கடலுக்கும் சதுப்பு நில பகுதிக்கும் இடையில் இப்பகுதி உள்ளதால், அதன் சுவை குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. மேலும், துரைப்பாக்கத்தில் மழைநீர் சேமிக்க ஏரிகள் இல்லை. இருந்த பல குளங்களும் ஆக்கிரமிப்பின் சிக்கி மாயமாகிவிட்டன.

இந்நிலையில், பெருங்குடி குப்பை கிடங்கு உருவாக்கி அங்கு குப்பைகள் கொட்ட ஆரம்பித்தனர். தற்போது, அந்த குப்பை கிடங்கில் ஒரு லட்சம் டன் குப்பைகள் சேகரமாகியுள்ளன. பெருங்குடி குப்பை கிடங்கு வந்த பின் துரைப்பாக்கம் நிலத்தடி நீரின் தன்மை மாற ஆரம்பித்தது. குப்பை கிடங்கை சுற்றி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் நிறம், சுவை மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், துரைப்பாக்கம் பகுதி நிலத்தடி நீரை ஆய்வு செய்து பார்த்ததில், அந்நீர் குடிப்பதற்கோ அல்ல மற்ற தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது என தெரியவந்தது.

மாத தண்ணீர் செலவு 2,500 ரூபாய்: துரைப்பாக்கம் பகுதியில் நிலத்தடி நீர் இல்லாத காரணத்தால், அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி தண்ணீரையே பெருமளவு நம்பியுள்ளனர். 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அப்பகுதியில் 900 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நான்குபேர் கொண்ட ஒரு குடும்பம், மாதத்திற்கு குறைந்த பட்சம் இருமுறை லாரி தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் படி மாதத்திற்கு தண்ணீர் தேவைக்காக 2,000 ரூபாய் செலவாகிறது. அதேபோல அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் 'கேன் வாட்டர்'களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒரு கேன் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், குடிநீருக்காக மாதத்திற்கு 500 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்த வகையில் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு குடும்பம் தண்ணீர் மட்டும் குடிநீர் செலவிற்கு, 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்பகுதி மக்கள் வாங்கும் சம்பளத்தில் தண்ணீருக்காக ஒரு தொகை செலவழிக்க வேண்டியுள்ளது.பொது நலச்சங்கத்தினர் கருத்து: துரைப்பாக்கத்தில் வசிக்கும் பொதுநலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, ''தற்போது, துரைப்பாக்கம் மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளதால் எதிர்காலத்தில் இப்பிரச்னை தீர்க்கப்படும் என நம்புகிறோம்.

இருப்பினும், இடைப்பட்ட ஒராண்டிற்கு எங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய டேங்கர் லாரிகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும். இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பை மனதில் கொண்டு, துரைப்பாக்கத்திற்கு மனிதனின் சராசரி தேவையான தண்ணீர் மற்றும் குடிநீர் விரைவில் வழங்க வேண்டும்'' என்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் கருத்துதுரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம்: ஊராட்சி மூலம் நாள் ஒன்றுக்கு எட்டு லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் தேவைக்காக பல இடங்களில் போர் போட்டுபார்த்தோம். அங்கு தரமற்ற நிலத்தடி நீர்தான் கிடைத்தது. எனவே, எங்கள் ஊராட்சி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நாள் ஒன்றுக்கு, 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மெட்ரோ வாட்டர் மூலம் வழங்க கோரி ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

அந்த தீர்மான நகல் மாவட்ட கலெக்டர் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளுக்கு ஓராண்டிற்கு முன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் கோரிய தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில், இந்த ஊராட்சி தண்ணீர் பிரச்னை ஓரளவிற்கு தீரும்.சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ., கந்தன்: ஊராட்சியின் சார்பில் 20 லட்சம் லிட்டர் நீரை குடிநீர் வழங்கல் துறையிடம் கோரியுள்ளனர். அந்த தண்ணீர் கிடைக்க, அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தளம் - 2 திட்டத்தின் கீழ், துரைப்பாக்கத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் முயற்சி மேற்கொள்வேன். துரைப்பாக்கம் சென்னை மாநகராட்சியுடன் இணைவதால் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையாõன குடிநீர் வழங்கப்படவுள்ளது. அதற்கு முன் தண்ணீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர்.சீனிவாசன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us