ADDED : அக் 07, 2011 12:55 AM
சென்னை : ''மாநகராட்சி சமூக நலக் கூடத்தை, தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையாக தரம் உயர்த்துவேன், '' என, 118வது வார்டு தே.மு.தி.க., வேட்பாளர் சுரேஷ்குமார் வாக்குறுதியளித்து ஓட்டு சேகரித்தார்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள, 118வது வார்டில் முதல்வர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன், தி.மு.க.,தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த வார்டில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் உட்பட, 15 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வார்டின், தே.மு.தி.க., வேட்பாளரான சுரேஷ்குமார், வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை பிரசாரத்தை துவக்கினார். அவர் பேசியதாவது: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின் பகுதியில் உள்ள முத்தயாள்ளம்மன் காலனிப் பகுதியில், மழை நீர் வடிய போதிய வசதிகள் செய்யப்படும். மாநகராட்சி சமூக நலக் கூடத்தை முறையாக பராமரித்து, தனியார் மண்டபங்களுக்கு இணையாக தரம் உயர்த்துவேன். வாகனம் நிறுத்தம் இல்லாமல், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளிலேயே, வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, குடியிருப்பு பகுதிகளின் வாகனங்களுக்காக, பொது வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும்.
ரேஷன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்ப, உணவுப் பொருள்கள் சப்ளை இல்லை. இது சீர்படுத்தப்படும். இளைஞர்களுக்காக, உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முத்தையால் தெரு, பார்த்தசாரதி பேட்டை, பாபு தெரு, வீதி கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் சுரேஷ்குமார் ஓட்டு சேகரித்தார்.


