Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/கடாபி ஆதரவாளர்கள் உடனான பேச்சு தோல்வி: டிரிபோலி வந்தார் இடைக்கால அரசின் தலைவர்

கடாபி ஆதரவாளர்கள் உடனான பேச்சு தோல்வி: டிரிபோலி வந்தார் இடைக்கால அரசின் தலைவர்

கடாபி ஆதரவாளர்கள் உடனான பேச்சு தோல்வி: டிரிபோலி வந்தார் இடைக்கால அரசின் தலைவர்

கடாபி ஆதரவாளர்கள் உடனான பேச்சு தோல்வி: டிரிபோலி வந்தார் இடைக்கால அரசின் தலைவர்

ADDED : செப் 11, 2011 11:25 PM


Google News
Latest Tamil News

டிரிபோலி : லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபிக்கு ஆதரவான மூன்று நகரங்கள் சரணடைவதற்கான கெடு, நேற்று முன்தினத்துடன் முடிந்ததை அடுத்து, அந்நகரங்களை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்களுக்கும், கடாபி ஆதரவாளர்களுக்கும் இடையில், நேற்று சண்டை துவங்கியது.

இதற்கிடையில், லிபியா இடைக்கால அரசின் தலைவர் முதன் முதலாக டிரிபோலி வந்தார். அவருக்கு மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர்.



லிபியா முழுமையும் எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்ட நிலையில், டிரிபோலியின் தெற்கில் உள்ள பானி வாலித், சபா, ஜுப்ரா நகரங்களும், கிழக்கில் உள்ள சிர்ட் நகரமும் கடாபி ஆதரவாளர்கள் வசம் உள்ளன.எவ்வித உயிரிழப்புமின்றி அந்நகரங்களைக் கைப்பற்றுவதற்காக, எதிர்ப்பாளர்கள், கடாபி ஆதரவு பழங்குடியினருடன் பேச்சு நடத்தினர். கடாபி ஆதரவாளர்கள் சரணடைவதற்கு, கடந்த 10ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது. எனினும் பேச்சு தோல்வியில் முடிந்தது.



இதையடுத்து நேற்று பானி வாலித், சபா மற்றும் சிர்ட் நகரங்களில் உள்ள கடாபி ஆதரவாளர்களுக்கும் அந்நகரங்களை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இடையில், சண்டை மூண்டது. பானி வாலித் நகர் மீது நேற்று, 'நேட்டோ' படை ஐந்து முறை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.



இதற்கிடையில், லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் நேற்று முன்தினம் முதன் முறையாக டிரிபோலி வந்தார். 'இது பழிவாங்கல், சட்டத்தை நாமே கையில் எடுத்தல் போன்ற காரியங்களுக்கான நேரமல்ல. இது ஒற்றுமையையும், ஒழுங்கையும் பேண வேண்டிய நேரம்' என்றார்.பாதுகாப்பு கருதித் தான் இதுவரை டிரிபோலிக்கு ஜலீல் வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைக்கால அரசின் செய்தித் தொடர்பாளர் ஜலால் அல் கலால், 'ஜலீலின் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு' என்று கூறியுள்ளார்.பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் லிபியா இடைக்கால அரசை அங்கீகரித்துள்ள நிலையில், நேற்று சர்வதேச நிதியமைப்பும் இடைக்கால அரசை லிபியாவின் புதிய அரசாக ஏற்றுக் கொண்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us