Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தனியார் எஸ்டேட் ஊழியர்கள் வழிப்பாதைக்காக சோலை காட்டின் 100 அடி உயர மரங்கள் அழிப்பு

தனியார் எஸ்டேட் ஊழியர்கள் வழிப்பாதைக்காக சோலை காட்டின் 100 அடி உயர மரங்கள் அழிப்பு

தனியார் எஸ்டேட் ஊழியர்கள் வழிப்பாதைக்காக சோலை காட்டின் 100 அடி உயர மரங்கள் அழிப்பு

தனியார் எஸ்டேட் ஊழியர்கள் வழிப்பாதைக்காக சோலை காட்டின் 100 அடி உயர மரங்கள் அழிப்பு

ADDED : ஜூலை 13, 2011 01:01 AM


Google News

தேனி மாவட்டம், சின்னமனூர் வனச்சரகத்தின் சோலை காட்டில் 100 அடி உயரத்திற்கு வளர்ந்த பெரிய மரங்கள், தனியார் எஸ்டேட் ஊழியர்களின் வழிபாதைக்காக அழிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் வனச்சரகத்தில் டீ, காபி, மிளகு, ஏலக்காய், கிராம்பு பயிரிடும் எஸ்டேட்டுகள் உள்ளன. மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள இந்த மலையில் உள்ள சோலை காடு மிகவும் அடர்ந்த காடாகவும், சூரிய ஒளியே விழாத அளவிற்கு பசுஞ்சோலை நிறைந்த காடாகவும் விளங்கி வருகிறது. இந்தக் காட்டிற்கு கீழே ஒரு தனியார் எஸ்டேட் உள்ளது. அந்த எஸ்டேட்டில் உள்ள பணிபுரியும் தொழிலாளர்கள் எஸ்டேட்டின் மேற்புரம் உள்ள காட்டின் வழியாக நடந்து செல்வதற்காக அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் மற்றும் 150 அடி உயரம் கொண்ட மரங்கள் திடீரென வெட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை இந்த காட்டிற்கு பின்புறம் உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதால் கேரள மாநிலத்தை சேர்ந்த யானைகள் சோலை காட்டிற்கு வந்து தஞ்சம் புகும்.

மேலும் யானைகளுக்கு பிடித்த இடமாக சோலை காடு விளங்குகிறது. யானைக்கு தேவையான உணவும், ஓய்விடமும் அக்காட்டில் கிடப்பதால் அங்கு யானைகள் மற்றம் காட்டெருமைகளும் கூட்டம், கூட்டமாக வருவதுண்டு. அதேபோல் இயற்கை வழங்கிய கொடையான சோலை காட்டில் மீண்டும் மரங்களை வளர்ப்பது கஷ்டமான காரியம். தமிழகத்தில் சோலை காடுகளை உருவாக்க வேண்டும் என்பது வனத்துறை திட்டத்தில் ஒன்று. ஏற்கனவே கொடைக்கானல், நீலகிரி காடுகளில் செடிகள் மூலம் சோலை காடுகளாக்கும் திட்டமும் தோல்வி பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது சோலை காடுகளில் உள்ள மரங்கள் அழிக்கப்படுவது, காடு வளத்திற்கு இழப்பு ஏற்படும் என இயற்கை ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.



இது குறித்து பெயர் கூற விரும்பாத இயற்கை ஆர்வலர் கூறியதாவது: சோலைகாடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரம் வெட்டிய சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. மரங்களை தவிர்க்க முடியாத காரணத்திற்காக வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அதற்கான நடைமுறையிலுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக பத்து புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, மரங்களை பேணிக்காப்பதிலும், புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். தனியார் எஸ்டேட் ஊழியர்கள் நடந்து செல்வதற்காக மரங்களை வெட்டியது மிகவும் அராஜகமான செயல். மரம் வெட்டிய நபர்களையும், அவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர்களையும் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, தண்டனை வழங்க வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



-நமது சிறப்பு நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us