UPDATED : ஜூலை 24, 2011 06:15 PM
ADDED : ஜூலை 24, 2011 04:32 AM
பீஜிங்: சீனாவில் நின்று கொண்டிருந்த புல்லட் ரயில் மீது, புயல் வேகத்தில் வந்த மற்றொரு புல்லட் ரயில் மோதிய விபத்தில், 35 பேர் பலியாகினர்.
210 பேர் காயம் அடைந்தனர். புல்லட் ரயில் விபத்திற்குள்ளாவது இதுவே முதன் முறை. இதனால், புல்லட் ரயில் விரிவாக்கத் திட்டத்தை, சீன அரசு தற்போதைக்கு கைவிடலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷீஜியாங் மாகாணத்தில், வென்÷ஷாவூ நகரிலிருந்து பூ÷ஷாவூ நகருக்குச் சென்று கொண்டிருந்த டி- 3115 புல்லட் ரயில், வழியில் மின்தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. கடுமையான மின்னல் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டிருந்தது.அதேநேரம், அத்தடத்தில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் வந்த மற்றொரு புல்லட் ரயிலான டி- 301, நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறத்தில் கடுமையாக மோதியது. விபத்து நடந்த போது, இரு ரயில்களிலும் சேர்த்து 1,400 பயணிகள் இருந்தனர்.மோதிய வேகத்தில் டி- 301 ரயிலின் நான்கு பெட்டிகள், தடம் புரண்டன. இரு பெட்டிகள் ரயில் பாலத்தில் இருந்து தரையில் விழுந்தன. இவ்விபத்தில், 32 பேர் பலியாகினர். 210 பேர் காயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் விரைந்து நடக்க அதிபர் ஹூ ஜிண்டாவோ உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஜூன் 30ம் தேதி, பீஜிங் - ஷாங்காய் இடையே, புல்லட் ரயில் ஒன்று விடப்பட்டது. 1,300 கி.மீ., தூரத்தை ஐந்து மணி நேரத்தில் இந்த ரயில் கடந்து விடும். மிக அவசர கதியில் இந்த ரயில் விடப்பட்டதற்கு, சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.சீன கம்யூனிஸ்ட் கட்சியின், 90 வது ஆண்டு விழா இம்மாதம் நடக்க இருப்பதாலும், சீனாவின் தொழில்நுட்ப வல்லமையை உலகிற்குக் காட்டி பெருமை கொள்ளவும் தான், அந்த ரயில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.கடந்த 2010க்குள், 16 ஆயிரம் கி.மீ., தூரமும், 2012க்குள் 13 ஆயிரம் கி.மீ., தூரமும் புல்லட் ரயில் சேவையை விரிவாக்க சீன அரசு திட்டமிட்டிருந்தது. அதேநேரம், ரயிலின் வேகத்தை, ஒரு மணி நேரத்துக்கு 500 கி.மீ., ஆக உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டிருந்தது.இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன ரயில்வே பெரும் கடன் சுமைக்குள் தள்ளப்பட்டிருந்தது. மேலும், 'அதிவேக ரயில்களை உருவாக்குவதில், தங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்' என, ஜப்பானின் கவாசாகி கனரக தொழிற்சாலை நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதால், சீனா தனது விரிவாக்கத் திட்டத்தை தற்போதைக்கு நிறுத்தலாம் எனத் தெரிகிறது.இதுகுறித்து 'சீனா டெய்லி' வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்,'புல்லட் ரயில்கள் துவக்கப்பட்ட இரு வாரங்களிலேயே, அவற்றின் சேவைகள் குறித்து மிக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.