Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பட்டுப்புழு வளர்ச்சித் துறை அலட்சியத்தால் வேதனை : மாற்றுத் தொழிலுக்கு மாறும் விவசாயிகள்

பட்டுப்புழு வளர்ச்சித் துறை அலட்சியத்தால் வேதனை : மாற்றுத் தொழிலுக்கு மாறும் விவசாயிகள்

பட்டுப்புழு வளர்ச்சித் துறை அலட்சியத்தால் வேதனை : மாற்றுத் தொழிலுக்கு மாறும் விவசாயிகள்

பட்டுப்புழு வளர்ச்சித் துறை அலட்சியத்தால் வேதனை : மாற்றுத் தொழிலுக்கு மாறும் விவசாயிகள்

ADDED : ஆக 03, 2011 01:20 AM


Google News

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், பட்டுப்புழு வளர்ச்சித் துறையினரின் அலட்சியத்தாலும், மூலப்பொருட்கள் கிடைக்காததாலும், பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள், மாற்றுத்தொழிலுக்கு மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன், பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள், 300க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பட்டுப்புழு வளர்ச்சித் துறையின் வழிகாட்டுதல் இல்லாததாலும், அரசு சலுகைகள் இல்லாததாலும், தற்போது பல விவசாயிகள் இத்தொழிலை விட்டு, மாற்றுத் தொழிலுக்கு மாறிவிட்டனர். தற்போது மாவட்டத்தில், 65 விவசாயிகள் மட்டுமே பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பட்டுப்புழு உற்பத்தி செய்ய, குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடமும், புழுக்களின் உணவான மல்பரி தழை பயிரிட ஒரு ஏக்கர் நிலமும் தேவை. பட்டுப்புழு உற்பத்தி, முட்டையில் தொடங்கி முழு வளர்ச்சியடைய 23 நாட்கள் ஆகும்.



இந்த நாட்களில் ஆறு பேரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பட்டுப்புழு முட்டைப் பருவத்தில் இருந்து கூடு வரை முட்டைப் பருவம், தோல் உரிப்புப் பருவம், வளர்ச்சிப் பருவம், கூடு கட்டும் பருவம், கூடு முழுமை அடையும் பருவம் என, 6 பருவமாக வளருகிறது. ஒவ்வொரு பருவத்தையும் விவசாயிகள் பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டும். இவ்வளவு நுணுக்கமாக உற்பத்தி செய்தும், அதை நல்ல லாபத்தில் விற்க முடியாததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் அடுத்த, பிரயாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி ஜீவரத்தினம் கூறும்போது, 'இத்தொழிலை மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறேன். தொழிலில் சிறிது கவனம் சிதறினாலும், கடும் நஷ்டம் ஏற்படும். தற்போது இத்தொழிலில், லாபம் பெற முடியவில்லை. காரணம், மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ச்சித் துறைக்கு அலுவலகம் இல்லை.



அதற்கான மூலப்பொருட்களும் மாவட்டத்தில் இல்லை. பட்டுப்புழு வளர்ப்புக்கான மூலப்பொருட்களை, ஆந்திர மாநிலம், பழமனேரி பகுதிக்குச் சென்று வாங்கி வரவேண்டியுள்ளது. இங்கு அலுவலகம் இல்லாததால், விவசாயிகளுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை. பட்டுப்புழுக்கள் வளர்ச்சி அடைந்த 3 நாட்களுக்குள், அதை விற்பனை செய்ய வேண்டும். அதற்கும் நாங்கள் ஆந்திர மாநிலம் செல்ல வேண்டியுள்ளது. உற்பத்திச் செலவு, பராமரிப்பு கூலி, வேலையாள் கூலி என, ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வரை செலவாகிறது. உற்பத்தி செய்த பொருளை விற்று வர, 2,000 ரூபாய் வரை செலவாகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பட்டுப்புழு ஒரு கிலோ 300ல் இருந்து 350 ரூபாய் வரை விற்பனையானது.



தற்போது கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை தான் விற்கப்படுகிறது. இதனால், மாற்றுத் தொழிலுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என, சோகத்துடன் கூறினார். பட்டு வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''பட்டுப்புழு உற்பத்தியில் கர்நாடகம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பட்டு வளர்ச்சித் துறைக்கென அலுவலகம் இல்லை. வேலூர் மாவட்ட அலுவலக அதிகாரிகள், களப்பணி இளநிலை பட்டு ஆய்வாளர்களிடம், பட்டு முட்டைகள் வினியோகம் என்ற பெயரில், முட்டைகளை வினியோகம் செய்யாமலேயே அதற்கு ஈடான பணத்தை பிடித்தம் செய்கின்றனர்,'' என்றார். எனவே, மாவட்டத்தில் உற்பத்திப் பொருட்கள் கிடைக்க வசதியாக பட்டு வளர்ச்சித் துறைக்கு அலுவலகம் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பட்டு வளர்ப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us