
பெங்களூரு : நில மறு அறிவிப்பு மோசடி, பத்ரா நதிநீர் திட்ட முறைகேடு வழக்குகளில், தான் கைதாக கூடும் என்ற எதிர்பார்ப்பில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக ஐகோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
பத்ரா நீர்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முறைகேடாக பணம் பெற்றதாகவும் எடியூரப்பா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, வரும் 27ம் தேதி லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜராக எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளிலும் தான் கைதாக கூடும் என்ற எதிர்பார்ப்பில், எடியூரப்பா, கர்நாடக ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
குமாரசாமிக்கு சம்மன்: இதற்கிடையில், ஜந்தக்கல் சுரங்க நிறுவனத்துக்கு லைசென்ஸ் புதுப்பிப்பு, தனியார் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்துக்கு நிலம் வழங்கியது தொடர்பாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவரது மனைவி அனிதா ஆகியோர் மீது, வழக்கறிஞர் வினோத் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், இருவரும், ஆகஸ்ட் 30ம் தேதி, லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என, லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
முதல்வர் சதானந்தா மீது வழக்கு: பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே-அவுட்டில், பி.டி.ஏ., நிலத்தில், முதல்வர் சதானந்தா, விதிமுறைகளை மீறி, வர்த்தக கட்டடம் கட்டுவதாகக் கூறி, பத்திரிகையாளர் நாகலட்சுமி பாய், கர்நாடக ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் நாகலட்சுமியை கண்டித்துள்ளது.
நீதிபதி கூறுகையில், ''முதல்வரான பின், சதானந்த கவுடா மீது குற்ற மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். இதன் நோக்கம் என்ன? அவரது ஊழலுக்கு எதிராக மனு தாக்கல் செய்தது இல்லாமல், சுய விளம்பரத்துக்காக செய்தது போன்று தெரிகிறது. விசாரணைக்கு முன்பே, செய்தித்துறைக்கு பேட்டியளித்ததும் கண்டிக்கத்தக்கது. இதுவரை எத்தனை பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளீர்கள் என அபிடவிட் வாயிலாக நீதிமன்றத்துக்கு மனு சமர்ப்பிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.