Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளிகளில் மூலிகை பண்ணை அமைப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

பள்ளிகளில் மூலிகை பண்ணை அமைப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

பள்ளிகளில் மூலிகை பண்ணை அமைப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

பள்ளிகளில் மூலிகை பண்ணை அமைப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

ADDED : ஆக 01, 2011 10:00 PM


Google News

உடுமலை : மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகளின் மகத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் குழும கோட்டம் சார்பில், மூலிகை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில், மக்களுக்கு ஏற்படும் நோய்களை மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகளின் மூலமாக குணப்படுத்தி வந்தனர். மஞ்சள் காமாலை, அம்மை, சளி, இருமல் போன்ற அனைத்து நோய்களுக்கும் மூலிகையையே பயன்படுத்தினர். முன்னோர்களும் மூலிகை செடிகளை வளர்க்க ஆர்வம் காட்டி வந்தனர். காலப் போக்கில் நாகரிக மாற்றம் ஏற்பட்ட பின், நோய்களுக்கு ஆங்கில மருந்தினை நாடத் துவங்கியதால், மூலிகை பயன்பாடு குறைந்தது. மூலிகைச் செடிகளின் மருத்துவ குணம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து இளைய தலைமுறையினருக்கு விளக்க இயற்கை ஆர்வலர்களும் ழர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பொதுப்பணித்துறையின் சுற்றுச்சூழல் குழும கோட்டம் சார்பில், நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ், பாலாறு, ஆழியாறு வடிநிலங்களுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளிகளில் மூலிகை பண்ணை அமைத்து வருகின்றனர். 55 வகையான மூலிகைச் செடிகளை பள்ளிகளுக்கு வழங்கி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.அதில், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மூலிகை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திலுள்ள மூலிகை பண்ணையில், ஒவ்வொரு செடிகளுக்கும் பெயர் மற்றும் எந்த நோய் தீர்க்க உதவும் என்ற விளக்கங்களும் எழுதப்பட்ட பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறியதாவது: மூலிகை குறித்து மாணவிகளுக்கு விளக்கும் வகையில், பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் குழும கோட்டம் சார்பில், 100 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஆடாதோடை, கற்பூரவள்ளி, திப்பிலி, தூதுவளை, நொச்சி, கருநொச்சி, முருங்கை, வல்லாரை, நன்னாரி, துளசி, வேம்பு உள்ளிட்ட 55 வகையான மூலிகைச் செடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உயிரியல் ஆசிரியர் அலிசேக் மன்சூர் மேற்பார்வையில் செடிகள் பராமரிக்கப்படுகின்றன என்றார்.பொதுப்பணித்துறை கோவை சுற்றுச்சூழல் குழும கோட்டம் செயற்பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது: பாலாறு-ஆழியாறு வடிநிலங்களில், நீர்வளநிலத்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மேலாண்மை பணிகள், விவசாயிகளுக்கு வேளாண்மை பயிற்சி, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பயிற்சி, ஊராட்சி தலைவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதில், ஒரு பகுதியாக மறைந்து வரும் மூலிகை குறித்த விழிப்புணர்வு இளைய தலைமுறைக்கு ஏற்படுத்த பள்ளிகளில் மூலிகை பண்ணை அமைக்கப்படுகிறது. போதுமான நீர் வசதி மற்றும் இடவசதியுள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, 16 ஆயிரம் ரூபாய் செலவில், மூலிகை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 24 பள்ளிகளில் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் குழும கோட்டத்துடன் இணைந்து திட்ட அமலாக்கப்பணிகளை பசுமை மாறா இயற்கை பாதுகாப்பு கழகத்தினர் மேற்கொண்டுள்ளனர். மூலிகை செடிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பின் பட்டுப்போயிருந்தால், மாற்றுச்செடிகள் வழங்கப்படும்,' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us