Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பயங்கர ஆயுதங்களுடன் பஸ்ஸில் வந்த கல்லூரி மாணவர்கள்

பயங்கர ஆயுதங்களுடன் பஸ்ஸில் வந்த கல்லூரி மாணவர்கள்

பயங்கர ஆயுதங்களுடன் பஸ்ஸில் வந்த கல்லூரி மாணவர்கள்

பயங்கர ஆயுதங்களுடன் பஸ்ஸில் வந்த கல்லூரி மாணவர்கள்

ADDED : ஆக 13, 2011 12:53 AM


Google News
நாமக்கல்: அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பஸ்ஸில் வந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை, நாமக்கல் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல், எருமப்பட்டியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லுரியில் படிக்கும், 100க்கும் மேற்பட்ட கேரள மாநில மாணவர்கள், கல்லூரி விடுமுறையில் நேற்று மாலை கேரளா புறப்பட்டுள்ளனர்.அதற்காக, அவ்வழியாக வந்த இரு தனியார் பஸ்களில் அம்மாணவர்கள் ஏறியுள்ளனர். அம்மாணவர்களில் பெரும்பாலானோர், அரிவாள், சூரிக்கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஏறியுள்ளனர். அதைக் கண்டு பஸ்ஸில் பயணித்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதுகுறித்து நாமக்கல் போலீஸாருக்கு, பயணிகள் தகவல் அளித்தனர். அந்த பஸ், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்தபோது, பஸ்சை நிறுத்திய போலீஸார், அம்மாணவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம், ஏ.எஸ்.பி., சுப்புலட்சுமி, நாமக்கல் டி.எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.அப்போது, 'தங்களது நண்பர்களது மொபைல் ஃபோனுக்கு, முன் பின் விவரம் தெரியாத எண்ணில் இருந்து ஃபோன் வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வரும்போது, உங்களை தாக்குவோம் என மிரட்டினர். அதனால், பாதுகாப்புக்காக இந்த ஆயுதங்களை எடுத்து வந்தோம்' என, தெரிவித்துள்ளனர்.

மாணவர்களது பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் பஸ்ஸில் பயணித்த சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நாமக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், அதிகளவில் கேரள மாநில மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில், பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி அருகே மற்றும் நாமக்கல் டவுனிலும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.அம்மாணவர்கள், கும்பல் கும்பலாக காலை, மாலை, நள்ளிரவு வேளையில் நகரினுள் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தவிர, அவர்களில் கோஷ்டி சேர்த்துக்கொண்டு நடுரோட்டில் மோதிக் கொள்ளும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதற்கு, கல்லூரி நிர்வாகமும், போலீஸாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us