ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
செஞ்சி : கைக்குழந்தையை கொல்ல முயன்ற பெரியம்மாவை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வட்டம் கெடார் அடுத்த கக்கனூர் காலனியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி(30). இவரது அண்ணி தேவகிக்கும் ஜெயமூர்த்திக்கும் வீட்டுமனை தகராறில் முன்விரோதம் உள்ளது. கடந்த 14ம் தேதி ஜெயமூர்த்தியின் மனைவி தமயந்தி தனது 4 மாத கைக்குழந்தையான அருள்ஜோதியை மாமியாரிடம் கொடுத்து விட்டு ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்குள் வந்த தமயந்தி குழந்தையின் வாயில் நுரை தள்ளியதையும், பால் பாட்டிலில் மண்ணெண்ணெய் வாசனையும் வீசியதையும் கண்டு திடுக்கிட்டார். உடனே குழந்தையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். முன்விரோதம் காரணமாக குழந்தையை கொலை செய்யும் நோக்கத்தோடு பால் பாட்டிலில் தேவகி மண்ணெண்ணெய் கலந்து கொடுத்துள்ளார் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து தேவகியை கைது செய்தனர்.