ADDED : ஆக 17, 2011 02:42 AM
மதுரை : ஒரு நாள் மழையில் தெப்பமாய் மாறிய மதுரைக்கு, மழை நீர் வடிகால்
திட்டத்திற்கு மாநகராட்சி செலவழித்த 256.87 கோடி ரூபாய் பலனளிக்கவில்லை.மழை
காலத்தில் மிதக்கும் மதுரையின் அவலத்தை போக்க, ஜவகர்லால் நேரு தேசிய
நகர்புறபுனரமைப்புத்திட்டத்தில் 'மழைநீர் வடிகால் திட்டம்'
கொண்டுவரப்பட்டது. 2007 ல் ஒப்புதல் பெற்ற திட்டம், இன்னும் நிறைவு
பெறவில்லை. மாநகராட்சியின் பங்களிப்புத்தொகை இல்லாமல் திட்டம் பாதியில்
நிற்கிறது. இதன்பாதிப்பு, மழைகாலத்தில் மோசமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழை, இதை உறுதிசெய்தது.
பெரியார் பஸ்ஸ்டாண்ட், வக்கீல் புதுத்தெரு, தவிட்டு சந்தை, தெப்பக்குளம்,
சிம்மக்கல் பகுதிகள் அதிகபட்ச பாதிப்பை சந்தித்தன. ரோட்டில் மழை நீர் குளம்
போல் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுவரை செலவழித்த கோடிகளுக்கு
விடை தெரியாமல் போனது. ஒரு நாள் மழைக்கு இந்த நிலை என்றால், தொடர்ந்து மழை
பெய்தால் மதுரை ரோடுகள் என்னவாகும்?மாநகராட்சி பொறியாளர் மதுரம்
கூறியதாவது: கனமழையே நீர்தேங்க காரணம். முடங்கியுள்ள மழைநீர் வடிகால்
திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், என்றார்.