Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்வேக்கு எதிரான போராட்டம்; மக்களை திரட்ட பிரசாரம்!

ரயில்வேக்கு எதிரான போராட்டம்; மக்களை திரட்ட பிரசாரம்!

ரயில்வேக்கு எதிரான போராட்டம்; மக்களை திரட்ட பிரசாரம்!

ரயில்வேக்கு எதிரான போராட்டம்; மக்களை திரட்ட பிரசாரம்!

ADDED : அக் 09, 2011 01:42 AM


Google News
கோவை : கோவையை தொடர்ந்து புறக்கணித்து வரும் தென்னக ரயில்வேக்கு எதிராக நவ.11ல் நடக்கும் போராட்டம் குறித்து பிரசாரம் மேற்கொள்ள ரயில்வே போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.கொங்கு நாடு முன்னேற்றக் கழக கோவை மாநகர தலைமை அமைப்பாளரும், கோவை ரயில்வே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தென்னக ரயில்வே, கோவை மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

கோவையிலிருந்து திருப்பூர்-ஈரோடு-கரூர்-திருச்சி-புதுக்கோட்டை-சிவகங்கை-காரைக்குடி-மானாமதுரை வழியாகச் செல்லும் கோவை-ராமேஸ்வரம் சிறப்பு ரயில், 7 மாவட்ட மக்களுக்குப் பயனளித்து வந்தது.அக்.8 உடன் முடிவடையும் இந்த சிறப்பு ரயிலை நீடிக்க வேண்டுமென கொ.மு.க., சார்பில் 250க்கும் மேற்பட்ட தந்திகள், தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பப்பட்டன. கோவையிலுள்ள பல்வேறு சமூக அமைப்புகளும், குடியிருப்போர் நலச்சங்கங்களும் இதை வலியுறுத்தியிருந்தன. ஆனால், எதையும் ஏற்காமல், இந்த ரயிலை நிறுத்தியிருக்கிறது தென்னக ரயில்வே.தீபாவளி நெருங்கும் நேரத்தில், தென் மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தென்னக ரயில்வே நிர்வாகம் செய்துள்ள இந்தச் செயல், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகும். ஆண்டுக்கு 122 கோடி ரூபாய் வருவாயை அள்ளித்தரும் தொழில் நகரமான கோவையை, தொடர்ந்து புறக்கணிப்பதை தென்னக ரயில்வே வாடிக்கையாக்கியுள்ளது.மனிதாபிமானமின்றி செயல்படும் ரயில்வே அதிகாரிகளின் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதே நிலை நீடித்தால், கோவை மக்களின் மிகப்பெரிய போராட்டத்துக்கு தென்னக ரயில்வே அதிகாரிகள், பதில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.கோவை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கேரளா ரயில்களை கோவைக்கு திருப்பக்கோரியும் கோவை எம்.பி., நடராஜன் தலைமையில் அனைத்துக் கட்சிகள், 34 சமூக அமைப்புகள், தொழில் அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கோரிக்கைகளை ஏற்காவிட்டால், நவ.11ல் மாபெரும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.இந்த போராட்டம் தொடர்பாக, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள சிறப்புக்குழு அமைக்கப்படவுள்ளது. வரும் 11-11-11 அன்று நடக்கும் போராட்டத்தில் மக்களைப் பங்கேற்கச் செய்வதற்காக இந்த குழு,பிரசாரங்களை மேற்கொள்ளும்.இது தொடர்பான, இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம், அக்.10ல் பெரியார் படிப்பகத்தில் நடைபெறவுள்ளது. மக்கள் நலன் விரும்பும் அரசியல்கட்சிகள், சமூக சேவை அமைப்புகள், தொழில் முனைவோர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us