கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்
கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்
ADDED : செப் 01, 2011 02:09 AM
மதுரை : கால்நடைகளை கொண்டு செல்ல விதிமுறைகள் இருந்தாலும், அதிகாரிகள் அமல்படுத்தாததால் வாகனங்களில் வதைபட்டு அவை பயணிக்கின்றன.
விதிமுறைகள்: ஆடுமாடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அரசு பதிவுபெற்ற கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, பயணிக்க தகுதியானவை என சான்று பெற வேண்டும். அதற்கு வாகனம், பயண தூரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கன்று ஈனும் பருவத்தில் உள்ள ஆடு, மாடுகள், புதிதாக கன்று ஈன்ற பசுக்கள், நோயுள்ளவை, முடமானவை, நோஞ்சான் மாடுகள் பயணிக்க தகுதியில்லை.கர்ப்பமானவற்றை தனியாக கொண்டு செல்ல வேண்டும். டிரக் அல்லது லாரிகளில் 5 பசுக்கள், அதன் கன்றுகளை ஏற்றிச் செல்லலாம். கன்றுகள் இல்லாமல் 6 பசுக்களை கொண்டு செல்லலாம். டெம்போக்களில் ஏற்றிச் செல்ல கூடாது. கடும் வெப்பமுள்ள பகலில் கொண்டு செல்லக் கூடாது.கால்நடைகள் ஒன்றோடொன்று மிதித்துவிடாதபடி, வாகனத்தின் உள்ளே 2 முதல் 3 மீட்டருக்கு ஒரு தடுப்பு குறுக்காக அமைக்க வேண்டும். காயமடையாமல் தவிர்க்க 5 செ.மீ., உயரத்திற்கு வைக்கோல் பரப்ப வேண்டும். கால்நடைகளை வண்டியில் ஏற்றி, இறக்க சாய்வு அமைப்பு வேண்டும். தேவையான தீவனம், தண்ணீர் வாகனத்தில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் தரவேண்டும். முதல் உதவி வசதிகள் வேண்டும். அனுப்புநர், பெறுநர் முகவரி, போன் நம்பர், எந்தவகை விலங்குகள் என்பதை வாகனத்தில் சிவப்பு நிறத்தில் எழுத வேண்டும். வாகனத்தின் இன்ஜின் இருக்கும் திசையை நோக்கி நின்றபடி பயணிக்க வேண்டும். வாகனத்தில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.ஆனால், இதுவரை எந்த வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. விவசாயிகள் அதற்கான விதியை அறிந்து இருப்பது நல்லது. தமிழ்நாடு விலங்குகள் நலஅமைப்பு டாக்டர்கள் வெங்கடேசன், வல்லையப்பன் கூறுகையில், 'இவ்விதிமுறைகள் விலங்குகள் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 98/1978க்கு உட்பட்டது. இவ்விதிகளை மீறினால், மாடுகளை பறிமுதல் செய்யலாம்,' என்றனர்.