கரீம் மொரானி ஜாமின் மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
கரீம் மொரானி ஜாமின் மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
கரீம் மொரானி ஜாமின் மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ADDED : ஆக 01, 2011 10:47 PM
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கரீம் மொரானியின் ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த, கரீம் மொரானி, கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கலைஞர் 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய், பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பான விவகாரத்தில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு சிகிச்சை பெறுவதற்காக, தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் எனக் கோரி, டில்லி ஐகோர்ட்டில், கரீம் மொரானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டில்லி ஐகோர்ட தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மொரானி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மொரானியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, உத்தரவிட்டனர். மேலும், கரீம் மொரானி, தனக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என, விரும்பினால், அது தொடர்பாக, திகார் சிறை அதிகாரிகளை அணுகி, தன் பிரச்னையை தெரிவிக்கலாம். சிறை அதிகாரிகள், இதை ஏற்க மறுக்கும்பட்சத்தில், அவர் கோர்ட்டை அணுகலாம் என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.