தயாளு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு : தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்
தயாளு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு : தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்
தயாளு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு : தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்
புதுடில்லி : 'ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் அனில் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்' என, கோரிய மனுவை, டில்லி ஐகோர்ட் ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்து விட்டது.
டில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.பர்கான், காசியாபாத்தைச் சேர்ந்த வர்த்தகர் தர்மேந்திர பாண்டே ஆகியோர், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், கடந்த மார்ச் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், சி.பி.ஐ., உண்மையை மூடி மறைப்பதாகவும் இவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால், இவர்கள் கோர்ட்டின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி சிறப்பு கோர்ட், மனுதாரர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, இவர்கள் நேற்று முன்தினம் டில்லி ஐகோர்ட்டில், இதே கோரிக்கையை வற்புறுத்தி மனு செய்தனர். இந்த மனுவை, நீதிபதி அஜித் பரிஹோக் விசாரித்தார்.
இது குறித்து நீதிபதி குறிப்பிடுகையில், 'இது பயனில்லாத மனு. மனுதாரருக்கு போதிய ஆதாரம் இருந்து நேரடியாக வாதாடலாம். இதற்கான ஆபத்தை அவர் தான் எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மனுவை வாபஸ் பெறுங்கள். தற்போது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் மனுவால் தேவையில்லாமல் பெரிய பிரச்னை தான் ஏற்படும்' என்றார். அத்துடன் மனுவை தள்ளுபடி செய்தார்.


