தேர்தல் விதிமீறல்: 100 தி.மு.க.,வினர் மீது வழக்கு
தேர்தல் விதிமீறல்: 100 தி.மு.க.,வினர் மீது வழக்கு
தேர்தல் விதிமீறல்: 100 தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2011 09:41 PM
திருச்சி : திருச்சியில், நேருவுக்காக ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது, தேர்தல் விதி மீறியதாக, 100 தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல், கடந்த 19ம் தேதி துவங்கி, இன்று முடிகிறது.
தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.நில அபகரிப்பு புகாரில் கைதாகி, கடலூர் சிறையில் உள்ள நேரு சார்பில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கடந்த 23ம் தேதி திருச்சி ஆர்.டி.ஓ., சம்பத்திடம் மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சத்திரம் பஸ் ஸ்டாண்ட், சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அங்கிருந்து கட்சியினருடன், திருச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்றார்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி, 50க்கும் மேற்பட்ட கார்களுடன் ஊர்வலமாக வந்ததாக அடையாளம் தெரிந்த, 100 தி.மு.க.,வினர் மீது கோட்டை போலீசார், தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த 21ம் தேதி, அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி மனு தாக்கல் செய்ய சென்ற போது, கோர்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர். அப்போது, அவர்கள் சாலையை மறித்துக் கொண்டு நின்றதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் மற்றும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆளும்கட்சி என்பதால், பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர் என்று, தி.மு.க.,வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.