/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேசியப் பறவையின் தோகை கூவிக்கூவி விற்பனைதேசியப் பறவையின் தோகை கூவிக்கூவி விற்பனை
தேசியப் பறவையின் தோகை கூவிக்கூவி விற்பனை
தேசியப் பறவையின் தோகை கூவிக்கூவி விற்பனை
தேசியப் பறவையின் தோகை கூவிக்கூவி விற்பனை
ADDED : செப் 14, 2011 01:10 AM
ஈரோடு : ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தேசியப்பறவையான மயிலின் தோகைகள் கட்டுக்கட்டாக விற்பனையாகிறது.காடு, விளை நிலங்களின் பரப்பு குறைவால், பறவை இனம் குறைந்தும், இடமாற்றமும் நடக்கிறது.
குறிப்பாக மயிலின் கறி மருத்துவ குணம் கொண்டது எனக்கூறி அவற்றை அதிகமாக வேட்டையாடுகின்றனர். தவிர, பசுமைப்புரட்சியால் வயல்களுக்கு தூவும் குருணை, பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல், பூச்சிக்கொல்லி மருந்து தண்ணீரில் கலந்து பாய்ச்சுதல் போன்றவற்றால், மயில்கள் உள்பட பறவைகள் அதிக எண்ணிக்கையில் குறைந்து வருகிறது. குறிப்பாக, மயில், பருந்து, கருடன், பல இன குருவிகள், நத்தை போன்றவை வெகுவாக குறைந்து விட்டன.மயிலை தேசியப்பறவையாகவும், ஹிந்துக்கள் முருகக்கடவுளின் வாகனமாகவும் கொண்டாடுகின்றனர். மயில் தோகைகளை வீடுகளில் வைக்கும் ஐதீகப்பொருளாக பார்க்கின்றனர். ஒடிஸா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள், தமிழகத்துக்கு மயில் தோகைகளை கொண்டு வந்து விசிறி, துடைப்பான், வீட்டு வரவேற்பறையில் வைக்கும் வகையிலான அழகுப்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவை 10 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்கின்றனர்.விற்பனை செய்யும் சிறுவர்கள் கூறுகையில், 'ஒடிஸா, மஹாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. அவற்றை வலை வைத்து பிடித்து, அதன் தோகையை மட்டும் பறித்துவிட்டு, விட்டு விடுவோம். அவை மீண்டும் வளர்ந்துவிடும். அங்கிருந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு எடுத்து வந்து விற்பனை செய்கிறோம். அங்கிருந்து ரயில் மற்றும் கூரியர் மூலம் தொடர்ந்து தோகைகளையும், அழகுபொருட்களையும் அனுப்பி வைக்கின்றனர்' என்றனர்.ஈரோட்டில் மயில் தோகைகள் தெருத்தெருவாக கூவி விற்பனை செய்வதை, வனத்துறையினரும், போலீஸாரும் கண்டு கொள்ளவில்லை.மயில் தோகைகளை இதுபோன்று அதிக எண்ணிக்கையில் அகற்றுவதை கட்டுப்படுத்த, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.