பொறியியல் கவுன்சிலிங் இடங்கள் ஒரு லட்சத்து 48 ஆயிரமாக உயர்வு
பொறியியல் கவுன்சிலிங் இடங்கள் ஒரு லட்சத்து 48 ஆயிரமாக உயர்வு
பொறியியல் கவுன்சிலிங் இடங்கள் ஒரு லட்சத்து 48 ஆயிரமாக உயர்வு
சென்னை: பொறியியல் சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 1 லட்சத்து, 47 ஆயிரத்து, 561ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 30ம் தேதியிலிருந்து, சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கும், அதைத்தொடர்ந்து, கடந்த எட்டாம் தேதியிலிருந்து, பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் நடந்து வருகின்றன. வரும், 11ம் தேதியுடன், பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிகிறது. ஆரம்பத்தில், அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை,1 லட்சத்து 30 ஆயிரத்திற்குள் தான் இருந்தது. ஆனால், கவுன்சிலிங் துவங்கியதற்குப் பின், தினமும் பல்வேறு புதிய கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கி வருகிறது.
இதுவரை, 29 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 1 லட்சத்து, 47 ஆயிரத்து, 561ஆக உயர்ந்துள்ளது. இதில், 31ம் தேதி வரை 67 ஆயிரத்து, 236 இடங்கள் நிரம்பியுள்ளன. மாணவர்கள், 36 ஆயிரத்து, 337 பேரும், மாணவியர், 30 ஆயிரத்து, 899 பேரும் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதுவரை, 18 ஆயிரத்து இரண்டு மாணவர்கள், 'ஆப்சன்ட்'. இரண்டு மாணவர்கள், தங்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர். மேலும், கவுன்சிலிங்கிற்கு வந்து, 200 மாணவர்கள், எந்தவித பாடப்பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுள்ளனர். இதற்கிடையே, பிளஸ் 2 உடனடித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காகவும், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்காகவும், நேற்று முதல் பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 12ம் தேதி முதல் நடக்கிறது.
யாருமே சேராத 16 கல்லூரிகள்: மாணவர் சேர்க்கை குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறும்போது,'16 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர், மாணவியர் கூட சேரவில்லை. 145 கல்லூரிகளில், 10 சதவீதத்திற்கும் குறைவாகத் தான் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 60 சதவீத கல்லூரிகளில், 90 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது' என்றார்.