PUBLISHED ON : செப் 20, 2011 12:00 AM

குறிக்கோளில் தெளிவு வேண்டும் : பொறியியல் மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., படிப்பது பற்றி கூறும், 'இண்டியன் ஐ.ஏ.எஸ்., அகடமி' இயக்குனர் சுஜாதா ரமேஷ்: ஐ.ஏ.எஸ்., தேர்வின் பிரிலிமினரி, மெயின், நேர்முகத் தேர்வு என்ற படிநிலைகளில், முதல் கட்டமாக பிரிலிமினரியில், 2010ம் ஆண்டு வரை இருந்த தேர்வுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவற்றில் சில, பொறியியல் தகுதியுடன் வரும் பட்டதாரிகளுக்கு அனுகூலமானவை. பொதுவாக, பொறியியல் மாணவர்கள், மூன்றாவது அல்லது இறுதி ஆண்டில் இருந்து கேம்பஸ் இன்டர்வியூவில், 'கோச்சிங்' என்ற பெயரில் பல பயிற்சிகளைப் பெறுவர். இந்தப் பயிற்சி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பேருதவியாக இருக்கும்.நடைமுறையில், ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வெளிவரும், பி.இ., - பி.டெக்., பட்டதாரிகள், ஐ.ஏ.எஸ்., வியூகத்தை எளிதாக அணுகுகின்றனர். கலை மற்றும் அறிவியல் மாணவர்களை விட, பொறியில் மாணவர்களுக்கு தங்களின் அதிக ஆண்டு கல்லூரிப் படிப்பினால், ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு ஓரிரண்டு ஆண்டுகள் தாமதமாவதையும், தங்கள் படிப்பிற்கே அதிக நேரம் செலவாவதால், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தயாரிப்பிற்கு மற்றவர்கள் போல், நேரம் ஒதுக்க முடிவதில்லை. இது தான் பொறியியல் மாணவர்களின் பின்னடைவிற்கு காரணம்.பொதுவாக நல்ல மதிப்பெண்களுடன், ஐ.ஏ.எஸ்., தயாரிப்பையும் மேற்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிடும். உடனே, அவர்கள், ஐ.ஏ.எஸ்., ஆசையை மறந்து, கிடைக்கும் வேலையில் அமர்ந்து விட்டு வருடங்கள் வீணாக்கி, திடீரென பழைய உந்துதலில் பயிற்சிக்குத் திரும்புவர். அதற்குள் அவர்களின் முந்தைய உந்துதலும், பாடத் தயாரிப்புகளும் நீர்த்துப் போயிருக்கும்.கற்ற பாடம், கிடைத்த கேம்பஸ் இன்டர்வியூ வேலை, குடும்ப நெருக்கடி, பொருளாதார வசதி இவற்றை பேலன்ஸ் செய்து, மாணவர்கள் தங்கள் திசையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.