பச்சை நிறமாக மாறிய மேட்டூர் தண்ணீர்
பச்சை நிறமாக மாறிய மேட்டூர் தண்ணீர்
பச்சை நிறமாக மாறிய மேட்டூர் தண்ணீர்
மேட்டூர் : மேட்டூர் அணை நீர் பச்சையாக மாறியது மட்டுமின்றி, நீரில் இருந்து கிளம்பும் துர்நாற்றம், கரையோர கிராமங்களில் பரவுவதால், சாப்பிட முடியாமலும், அணை நீரை குடிக்க முடியாலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நாற்றம் காற்றின் மூலம் அணை அருகாமையில் உள்ள கோட்டையூர், தெலுங்கனூர், பண்ணவாடி பகுதியிலுள்ள குக்கிராமங்களுக்கும் பரவுகிறது. பகலை விட இரவு நேரம் துர்நாற்றம் அதிகமாக இருப்பதால் கிராம மக்கள் துர்நாற்றத்தை சகிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மீனவர்கள் பெரும்பாலோர் இரவில் வீட்டுக்கு வெளியே கட்டில் போட்டு தூங்குவது வழக்கம். ஒருவாரமாக தண்ணீரில் வீசும் துர்நாற்றம் காரணமாக கோட்டையூர் பகுதி மக்கள் இரவில் வெளியில் படுத்து தூங்குவதில்லை. துர்நாற்றத்தை தவிர்க்க இரவில் வீடுகளின் ஜன்னல், கதவுகளையும் பூட்டியே தூங்குகின்றனர். மேலும், கரையோர மக்கள் பெரும்பாலோர் அணை நீரையே குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்தினர். தற்போது தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால், அதை குடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பச்சை நிறமாக மாறியுள்ள நீரில் பிடிபடும் மீன்களை சமையல் செய்தால், அந்த குழம்பும் துர்நாற்றம் வீசுவதாக கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து, 241 கி.மீ., தூரத்திலும், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 182 கி.மீ.,தூரத்திலும் மேட்டூர் அணை உள்ளது. கபினி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும்பட்சத்தில் மேட்டூர் அணை நீரில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால், கே.ஆர்.எஸ்., அணையில் திறக்கும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தபின்பும் நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கே..ஆர்.எஸ்., அணையில் இருந்து வெளியேறி காவிரியாற்றில் வரும் நீரில் கர்நாடகாவில் பல பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர், ரசாயன கழிவுநீர் கலப்பதே மேட்டூர் அணை நீர் துர்நாற்றம் வீசுவதற்கு காரணம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வாரமாக கோட்டையூர் முதல் பண்ணவாடி வரை மேட்டூர் அணையில் தேங்கி நிற்கும் நீர் துர்நாற்றம் வீசுவதாலும், அந்த நீரை குடித்தால் உடல் நிலை பாதிப்பதும் கரையோர கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


