Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தியாகி தந்த நிலத்தில் அவருக்கு சிலை வைக்க எதிர்ப்பு

தியாகி தந்த நிலத்தில் அவருக்கு சிலை வைக்க எதிர்ப்பு

தியாகி தந்த நிலத்தில் அவருக்கு சிலை வைக்க எதிர்ப்பு

தியாகி தந்த நிலத்தில் அவருக்கு சிலை வைக்க எதிர்ப்பு

ADDED : ஜூலை 28, 2011 02:58 AM


Google News
கோபிசெட்டிபாளையம்:பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வள்ளல், தியாகி லட்சுமண அய்யரின் சிலையை அமைக்க, அந்தப் பள்ளி நிர்வாகமே எதிர்க்கிறது.ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் லட்சுமண அய்யர்; சுதந்திரப் போராட்ட தியாகி. பிரிட்டிஷ் அரசு அரிஜனங்களுக்கு தனி தொகுதி ஒதுக்கீட்டை மறுத்த போது, 1931ல் காந்தியடிகள் சாகும்வரை உண்ணாவிரதத்தை துவக்கினார். அப்போது, லட்சுமண அய்யர் கோபியில் அரிஜன காலனிகளுக்கு சென்று சுத்தம் செய்தல், துணி வாங்கி கொடுத்தல், பொது கிணறுகளில் தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். 1935ல் தனது வீட்டிலேயே, அரிஜன மாணவர் விடுதி துவங்கினார். இலவச உணவு, தங்குமிடம் அளித்தார். இந்த விடுதி இன்றும் இயங்குகிறது. 1939ல் தனி நபர் சத்தியாகிரஹ போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்று, நான்கரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.கோபி நகராட்சி தலைவராக இரு முறை பதவி வகித்தார்.

பவானி ஆற்றில் இருந்து கோபிக்கு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையை அறவே ஒழிக்கும் விதத்தில், தனி நபர் சுகாதார கழிப்பிட திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார். இப்பணிக்காக ஜனாதிபதி விருது பெற்றார்.கோபியில் உள்ள வைரவிழா மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரிஜன மாணவர் விடுதி, தலைமை குடியேற்று நிலையம், பொதுப்பணி துறை பாசன அலுவலகம் ஆகியவை இவர் தானமாக வழங்கிய நிலத்தில்தான் இயங்குகின்றன. இச்சொத்துக்களின் மதிப்பு இன்று பல கோடி ரூபாய் பெறும்.நடமாடும் காந்தியாக திகழ்ந்த தியாகி லட்சுமண அய்யர், நடப்பாண்டு ஜனவரி 2ம் தேதி காலமானார். இவரது தியாகத்தை போற்றும் வகையில் இவருக்கு சிலை வைக்க வேண்டும் என, கோபி நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. சிலைக்கான முழுச் செலவை, தானே ஏற்றுக்கொள்வதாக வேளாண் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.கோபி வைர விழா பள்ளிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவர் என்ற முறையிலும், இப்பள்ளியின் நிர்வாக குழு தலைவராக இருமுறை இருந்தவர் என்பதாலும், பள்ளி வளாகத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவ அனுமதி வேண்டி, பள்ளி நிர்வாக குழுவுக்கு, சிலை அமைப்பு கமிட்டி கடிதம் அனுப்பியது.சென்ற மாதம் 18ம் தேதி பள்ளி நிர்வாகக்குழு கூடியது. தியாகியின் சிலையை பள்ளி வளாகத்தில் வைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் சர்ச்சை ஏற்பட்டு, தீர்மானம் கைவிடப்பட்டது. இது கோபி பொது மக்கள் மத்தியில் மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us