Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் போலி வியாபாரிகளால் நெரிசல்

கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் போலி வியாபாரிகளால் நெரிசல்

கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் போலி வியாபாரிகளால் நெரிசல்

கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் போலி வியாபாரிகளால் நெரிசல்

ADDED : ஆக 23, 2011 02:03 AM


Google News
கோயம்பேடு : கடைகளாக மாறிய குடோன்கள்; ஒவ்வொரு கடை வாசலிலும் முளைக்கும் புதிய கடைகள்; பாதைகளில் நாற்காலி போட்டு அடாவடியாக அமைக்கப்படும் திடீர் கடைகள் என எவ்வித உரிமமும் இன்றி, விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்யும் வியாபாரிகளால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் உச்சக்கட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் எவ்வித உரிமமும் பெறாமல், தங்களுக்கென கடைகளும் இல்லாத நிலையில், பலர் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காய்கறி மார்க்கெட்டில் 500க்கும் மேற்பட்டவர்களும், பழ மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்டவர்களும் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது.குறிப்பாக தக்காளி, கோஸ், தேங்காய், பீனஸ் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளும், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகளையும் பல லாரிகளில் கொண்டு வந்து மொத்த விலையில் விற்கின்றனர். இதனால், ஏற்கனவே முறையாக உரிமம் பெற்று, மொத்த வியாபாரத்தில் 60 சதவீதத்திற்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் கூறி வருகின்றனர்.மேலும், இவர்களது காய்கறி மற்றும் பழங்களை ஏற்றி வரும் கன்டெய்னர்கள் மார்க்கெட் வளாகத்தில் பல இடங்களிலும், நிறுத்தி வைப்பதால் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. இவர்களில் பலர் வியாபார போட்டியின் காரணமாக, தைரியமாக இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாநிலத்தை சேர்ந்த சிலரும், இது போல ஆப்பிள், சாத்துக்குடி பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காய்கறி மார்க்கெட்டில் பலர் கடைகளின் முன்பே மேஜை, நாற்காலியை போட்டு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். சில மொத்த வியாபாரிகளே இது போல திடீர் கடைகளை அமைத்து, வாடகைக்கு விட்டு பணம் பார்ப்பதாக தெரிகிறது. உரிமம் இல்லாத போலி வியாபாரிகள் மார்க்கெட்டிற்குள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களுக்காக வரும் சரக்கு வாகனங்களால் நெரிசல் உச்சத்தை தொட்டுள்ளது.தொடர்ந்து ஆண்டு கணக்கில் நடக்கும் இந்த முறைகேட்டை, மார்க்கெட்டை நிர்வகிக்கும் நிர்வாக அங்காடி குழு கண்டு கொண்டதாக தெரியவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முறைகேட்டிற்கு உறுதியான தீர்வு கிடைக்கும் என, முறையாக உரிமம் பெற்ற வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.இது குறித்து, காய்கறி மற்றும் பழ மார்க்கெட் மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:இந்த விஷயத்தில் நிர்வாக அங்காடி குழு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் காய்கறி மற்றும் பழங்களை கனரக வாகனங்களில் ஏற்றி வரும் வாகனங்கள், எந்த கடைக்கு செல்கிறது எனவும், அதற்கான ரசீதும் கேட்டு முறைப்படுத்த வேண்டும். ஆனால், நிர்வாக அங்காடி குழுவினர் அப்படி செய்யவில்லை. இனியாவது மார்க்கெட் மொத்த வியாபாரத்தை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.காய்கறி, பழம் மற்றும் பூக்கள் மொத்த வியாபாரத்தில் சரியான விலையில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் கோயம்பேடு மார்க்கெட். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் இயங்கும் நிர்வாக அங்காடி குழு மூலம் பராமரிக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை பொறுத்தவரை 750 மொத்த வியாபாரிகளும், 900 சில்லரை வியாபாரிகளும் முறையான உரிமம் பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல, பழ மார்க்கெட்டில் 150 மொத்த வியாபாரிகளும், 600 சில்லரை வியாபாரிகளும் முறையான உரிமம் பெற்றுள்ளனர்.

எஸ்.விவேக்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us