Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கே.என்.நேருவை போலீஸ் காவலில் விடக் கோரிய மனு தள்ளிவைப்பு

கே.என்.நேருவை போலீஸ் காவலில் விடக் கோரிய மனு தள்ளிவைப்பு

கே.என்.நேருவை போலீஸ் காவலில் விடக் கோரிய மனு தள்ளிவைப்பு

கே.என்.நேருவை போலீஸ் காவலில் விடக் கோரிய மனு தள்ளிவைப்பு

ADDED : செப் 09, 2011 09:13 PM


Google News
Latest Tamil News

மதுரை: திருச்சியில் அண்ணா அறிவாலயம் கட்ட நிலம் அபகரித்த வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை போலீஸ் காவலில் விடக் கோரிய மனுவை, செப்., 12க்கு தள்ளிவைத்த மதுரை ஐகோர்ட் கிளை, துணை மேயர் அன்பழகன் உட்பட மூவரை, போலீஸ் காவலில் விட மறுத்தது.



துறையூரைச் சேர்ந்தவர் டாக்டர் சீனிவாசன்.

இவருக்குச் சொந்தமான நிலத்தை, அண்ணா அறிவாலயம் கட்ட அபகரித்ததாக, கே.என்.நேரு, அவரது சகோதரர் ராமஜெயம், சேகர், திருச்சி மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், ஷெரீப் உட்பட 11 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் நேரு, அவரது சகோதரர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.வழக்கு குறித்து விசாரிக்க வேண்டி நேரு, சேகர், அன்பழகன், ஷெரீபை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விடக் கோரி, உதவி கமிஷனர் மாதவன், ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். மனு, நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கே.என்.நேருவை போலீஸ் காவல் கோருவது குறித்து, அரசு கூடுதல் வழக்கறிஞர் ராமச்சந்திரன், அவகாசம் கோரினார். அதை ஏற்று, அந்த மனுவை மட்டும் செப்., 12க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.



அன்பழகன் உட்பட மூவரை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விட வேண்டும் என, அரசு வழக்கறிஞர் கோரினார். இதற்கு, மூவரது வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ், செந்தில்குமார் ஆட்சேபம் தெரிவித்தனர். உதவி கமிஷனர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ''மூவரும் கைதாகி 15 நாட்களுக்குப் பின் காவல் கோரி மனு செய்ததை, ஏற்க முடியாது,'' என்றார்.



அனிதா மனு ஒத்திவைப்பு: வழக்கறிஞர்களின் கோர்ட் புறக்கணிப்பால், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஜாமின் மனு விசாரணை, செப்.,12க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை கொலை செய்ய தூண்டியது உள்ளிட்ட மூன்று வழக்குகளில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரி போலீசால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



இம்மூன்று வழக்குகளிலும் ஜாமின் கோரி, அவர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்ததால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணையை, செப்., 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us