கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நிறுவிய கணபதி ஸ்தபதி காலமானார்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நிறுவிய கணபதி ஸ்தபதி காலமானார்
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நிறுவிய கணபதி ஸ்தபதி காலமானார்

சென்னை: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கணபதி ஸ்தபதி, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் கணபதி ஸ்தபதி, 85.
இவரது மாணவர்கள், உலகம் முழுவதும் பரவி, பல நூற்றுக்கணக்கான கோவில்களையும், அடையாளச் சின்னங்களையும் நிறுவி வருகின்றனர். சமீபத்தில், மாமல்லபுரம் அடுத்த வடகுரும்பாடியில், தனது மூத்தோர் மயன் என்ற முதல் சிற்பிக்கு, கோவில் கட்டி வந்தார். கணபதி ஸ்தபதி, பத்ம விபூஷன், சில்ப குரு, வாஸ்து ரத்னா, இந்திய கைவினைக் கலைஞர்களுக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணியில் மனைவி தர்ஷாவதியுடன் வசித்து வந்த இவருக்கு, கடந்த ஞாயிறு அன்று, உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பெருங்குடியில் உள்ள லைப்லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், நிமோனியா காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நுரையீரலில், சளி அதிகம் காணப்பட்டது. இதனால், சுவாசிக்க முடியாமல் தவித்தார். மேலும், உடல் உறுப்புகள் ஒன்வொன்றாக செயலிழந்தன. இருப்பினும், அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். அவர் உடல், வடகுரும்பாடிக்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை, உடல் தகனம் செய்யப்படுகிறது. கணபதி ஸ்தபதிக்கு வாரிசுகள் இல்லை.
கருணாநிதி இரங்கல்: குமரியில் வள்ளுவர் சிலை எழுப்பிய கணபதி ஸ்தபதி மறைவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமையவும், குமரியில் வள்ளுவர் சிலை எழுப்ப பெரிதும் துணையாக இருந்து, அந்த பெரும் பணிகளிலே இரவுப் பகலாக கண் விழித்து, வெற்றிகரமாக முடித்த கணபதி ஸ்தபதி மறைந்து விட்டார். சமீபத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி ஏற்படாவிட்டாலும் கூட, சில மாதங்களுக்கு ஒரு முறை எப்படியாவது என்னைச் சந்தித்து விடுவார். அவரது இழப்பு, தமிழகத்திற்கும், சிற்பக் கலைக்கும் மிகப் பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் சிற்பக் கலை வல்லுனர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.