/உள்ளூர் செய்திகள்/சேலம்/உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறுவதில் காங்., கட்சியில் கோஷ்டிஉள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறுவதில் காங்., கட்சியில் கோஷ்டி
உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறுவதில் காங்., கட்சியில் கோஷ்டி
உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறுவதில் காங்., கட்சியில் கோஷ்டி
உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு பெறுவதில் காங்., கட்சியில் கோஷ்டி
ADDED : செப் 22, 2011 01:52 AM
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல்
கட்சிகள் விருப்ப மனு வாங்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில்
காங்., நிர்வாகிகள் வழக்கம் போல, விருப்பு மனு வாங்குவதிலும்,
'குடுமிப்பிடி' சண்டை நடத்தி வருவதை கண்டு, தொண்டர்கள் அதிருப்திக்கு
உள்ளாகியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சேலம் மாநகர, மாவட்ட காங்., தலைவர் பன்னீர்
செல்வம் தலைமையில், முள்ளுவாடி கேட் அருகே உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு
வாங்கப்படுகிறது. அதேபோல, கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், ஆத்தூரிலும்,
மேற்கு மாவட்ட தலைவர் கோபால், இடைப்பாடியிலும் விருப்ப மனுக்களை பெற்று
வருகின்றனர்.சேலம் மாநகர, மாவட்ட காங்., தலைவர் பன்னீர் செல்வத்திடம்,
மாநகராட்சி மேயர் பதவிக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், பாராளுமன்ற
இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயவர்மன், மாநகர பொதுச் செயலாளர் கோபிகுமரன்,
மகிளா காங்கிரஸ் மாநகர தலைவி சாரதாதேவி, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்
பொதுச் செயலாளர் அர்த்தனாரி உள்பட, 12 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் பிரமுகர்கள்
விருப்ப மனு அளித்துள்ளனர்.மேற்கு மாவட்ட தலைவர் கோபாலிடம், நகராட்சி
தலைவர், கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், கவுன்சிலர், கிராம பஞ்சாயத்து
கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 550 பேர் வரை விருப்ப மனு அளித்துள்ளனர்.
அதேபோல, கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜிடம், 450 பேர் வரை, தேர்தலில்
போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ்
கட்சி தனித்து போட்டியிடும் முடிவை அடுத்து, விருப்ப மனு வாங்கும்
காலக்கெடு, மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.விருப்ப மனுக்கøளை
பெற்று வரும் மாநகர மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், மேற்கு மாவட்ட தலைவர்
கோபால், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர், தமிழக காங்கிரஸ் தலைவர்
தங்கபாலு மூலம் அங்கீகரிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களிடம்
வழங்கப்படும் விருப்ப மனுக்கள் மட்டுமே, ஏற்றுக்கொள்ளப்படும் என்று
கூறப்படுகிறது.ஆனால், சேலம் மாவட்டத்தை பொருத்தவரை தங்கபாலுக்கு எதிர்
கோஷ்டியாக செயல்படும், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் தேவதாஸ் தனியாகவும்,
மாநில செயலாளர் சுசீந்திரகுமார் தனியாகவும், உள்ளாட்சி தேர்தலில்
போட்டியிடும் காங்., பிரமுகர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
தங்கபாலு மீது நம்பிக்கை இல்லாத வாசன் கோஷ்டியை சேர்ந்தவர்கள்,
சுசீந்திரகுமாரையும், தேவதாஸையும் பெரிதும் நம்பி விருப்ப மனுக்களை அளித்து
வருகின்றனர். சுசீந்திரகுமாரிடம், மேயர் வேட்பாளராக போட்டியிட, 4 பேரும்,
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 40 பேர் வரை விருப்ப மனு
அளித்துள்ளனர். அதேபோல, கிழக்கு மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றுள்ள
தேவதாஸிடம், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் உள்ளாட்சி அமைப்புகளில்
போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.தனிதனி கோஷ்டியாக
நிர்வாகிகள் பிரிந்து நின்று, விருப்ப மனுக்களை பெற்று வருவதால், காங்கிரஸ்
பிரமுகர்கள் யாரிடம் கொடுத்தால், 'சீட்' உறுதியாகும் என்று தெரியாமல்
குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏற்கனவே, மக்களிடம் செல்வாக்கை இழந்து வரும்
காங்கிரஸ் கட்சியில், நிர்வாகிகளின், 'குடுமிப்பிடி' சண்டை, கோஷ்டி
ஆவர்த்தனம் செய்வதால், தேர்தலில் வெற்றி பெறுவது வெறும் கானல் நீராகவே
இருக்கிறது.
மாநகர மாவட்ட துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:தமிழக காங்கிரஸ் தலைவர்
தங்கபாலுவுக்கு எதிராக, தேர்தலில் பணி செய்ததை ஆதாரத்துடன், அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டியிடம் சமர்ப்பித்து, கிழக்கு மாவட்ட தலைவர் தேவதாஸ்,
மேற்கு மாவட்ட தலைவர் சேகரன் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போது, மேற்கு மாவட்ட தலைவர் கோபால், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ்
ஆகியோரிடம் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப
மனுக்களை அளிக்க வேண்டும். வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில்
தேவதாஸ், சுசீந்திரகுமார் ஆகிய இருவரும் விருப்ப மனுக்களை பெற்று
வருகின்றனர். அவர்கள், பெறும் விருப்ப மனுக்களை மாநில தலைவருக்கு
கொடுத்தாலும், கிழக்கு, மேற்கு, மாநகர தலைவர்கள் பரிந்துரைக்குதான்
கடைசியில் வரும். எனவே, குழப்பத்தை ஏற்படுத்துபவர்களிடம் ஏமாற
வேண்டாம்என்றார்.மூப்பனார் பேரவை, மாநகர, மாவட்ட மகளிரணி தலைவி அமுதா
கூறியதாவது:தங்கபாலுவுக்கு ஆதரவாளர்களான மாநகர தலைவர், கிழக்கு, மேற்கு
மாவட்ட தலைவர்கள், பாராபட்சமாக நடந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கிய பொறுப்பு, பதவி,
தேர்தலில் வாய்ப்பு வாங்கி கொடுக்கின்றனர். காங்கிரஸ் தொண்டர்களை தரம்
பிரித்து பார்ப்பதும், பல ஆண்டுகளாக கட்சி பணி பார்ப்பவர்களை
புறக்கணிப்பது, புதியவர்களுக்கு முக்கியத்தும் கொடுப்பது என ஒரு தலைபட்சமாக
நடந்து கொள்வதால், எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைவர்களிடமும்,
நிர்வாகிகளிடமும் விருப்ப மனுக்களை அளித்து வருகிறோம் என்றார்.
- நமது நிருபர் -


