Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/இடிந்து விழும் அபாயத்தில் மீனவர் குடியிருப்பு

இடிந்து விழும் அபாயத்தில் மீனவர் குடியிருப்பு

இடிந்து விழும் அபாயத்தில் மீனவர் குடியிருப்பு

இடிந்து விழும் அபாயத்தில் மீனவர் குடியிருப்பு

ADDED : ஜூலை 21, 2011 12:32 AM


Google News
கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக அமைக்கப்பட்ட, திருச்சினாங்குப்பம் மீனவர் குடியிருப்பு, போதிய பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சீரமைப்புப் பணிகளை, தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவொற்றியூரில், கடலரிப்பால் வீடுகளை இழந்தோருக்காக, கடந்த 1993ல், திருச்சினாங்குப்பம் மீனவர் குடியிருப்பு கட்டப்பட்டது. 2.4 கோடி ரூபாயில், 492 வீடுகள் கொண்ட குடியிருப்பு அமைந்தது. குடியிருப்பு கட்டி முடித்து, 18 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால், உப்புக் காற்றால் குடியிருப்பு படுமோசமாகிவிட்டது.வீடுகளில், பால்கனி சுவர் இடிந்து விழுகின்றன. மேல் தள பூச்சுக்கள் உடைந்து, கீழே விழுவதாக உள்ளது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சரியும் நிலையிலும், கம்பிகள் ஆங்காங்கே நீட்டிக் கொண்டும் உள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், குடியிருப்பு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது.சமீபத்தில், வீட்டு சுவர் சரிந்து, இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் முன், குடியிருப்பை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த அருண்காந்த், ''குடியிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளதால், அவ்வப்போது இடிந்து விழுகிறது. இரவு நேரத்தில் வீடுகளுக்குள் தூங்க பயந்து, வெளியில் வந்து தூங்கும் நிலை உள்ளது. எனவே, குடியிருப்பை அரசு சீரமைத்துத் தர வேண்டும்'' என்றார்.தொகுதி எம்.எல்.ஏ., குப்பன், ''குடியிருப்பின் மோசமான நிலை குறித்து மீன்வளத்துறை அமைச்சருக்கு தெரிவித்துள்ளேன். அவர் குடியிருப்புக்களை ஆய்வு செய்ய உள்ளார். குடியிருப்புகள் விரைவில் சீரமைத்துத் தரப்படும்'' என்றார்.எண்ணூர் கடற்கரை சாலை விரிவாக்கத்தின்போது, கழிவுநீர் குழாய் சேதமடைந்ததால், குடியிருப்பைச் சுற்றி கழிவுநீர் தேங்கியது. அதற்கு தீர்வு காணும் வகையில், 16 லட்ச ரூபாய் செலவில், கால்வாய்களைச் சீரமைக்கும் பணியை நகராட்சி துவங்கியுள்ளது. குடிநீர் வசதிக்காக, எட்டு இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மிக மோசமான நிலையிலிருந்த இந்த குடியிருப்பு, 2004ம் ஆண்டில், 90 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டாலும், போதிய பராமரிப்பின்மையாலும், கடல் காற்றின் பாதிப்பாலும், குடியிருப்பு தற்போது மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

ஆர்.குமார் / சென்னை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us