Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வண்டலூர் பூங்காவில் மழை நீர் சேகரிப்பு பணிகள் வேகம்

வண்டலூர் பூங்காவில் மழை நீர் சேகரிப்பு பணிகள் வேகம்

வண்டலூர் பூங்காவில் மழை நீர் சேகரிப்பு பணிகள் வேகம்

வண்டலூர் பூங்காவில் மழை நீர் சேகரிப்பு பணிகள் வேகம்

ADDED : செப் 21, 2011 01:09 AM


Google News

மழை காலம் விரைவில் துவங்க உள்ளதை கருத்தில் கொண்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவின் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க அங்குள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணியில் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள், பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்புக்கள் பயன்பாட்டிற்காக தினசரி ஒரு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.

விலங்குகளுக்கான குடிநீர், குளிப்பாட்டுதல், விலங்குகள் இருப்பிடங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நீர் தேவைப்படுகிறது.தற்போது, தமிழ்நாடு குடிநீர் வாரியத்திடம் இருந்து தினசரி 60 ஆயிரம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள பாலாறு ஆற்றில் இருந்து, குழாய்கள் மூலம் குடிநீர் பூங்காவிற்கு கொண்டு வரப்படுகிறது. மீதமுள்ள 50 ஆயிரம் லிட்டர் நீர் பூங்காவில் உள்ள கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது. பூங்காவின் தண்ணீர் தேவைக்காக தற்போது 13 திறந்தவெளி கிணறுகளும், ஐந்து ஆழ்துளைக்கிணறுகளும் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள இரு ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினசரி 50 ஆயிரம் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. இந்த கிணறுகள் அனைத்தும் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ளன. பூங்காவின் நிலத்தடி நீர் மட்டத்தை அங்குள்ள ஓட்டேரி முனை ஏரியும், இரண்டு குளங்களும் பாதுகாக்கின்றன. நீர் பறவைகள் சரணாலயத்தில், சிறு குன்றின் அடிவாரத்தில் ஓட்டேரி முனை ஏரி அமைந்துள்ளது. குன்றின் மீது பெய்யும் மழை நீர் ஓடைகள் வழியாக வந்து, இந்த ஏரியில் சேர்கிறது. பரந்துவிரிந்து கிடக்கும் இந்த ஏரி தான் வண்டலூர் பூங்கா நிலத்தடி நீர் மட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இதுதவிர, மான் சபாரி அருகேயும், செந்நாய் கூடம் அருகேயும் இரண்டு குளங்கள் உள்ளன.இந்த நீர் நிலைகளில் வருடம் முழுவதும் நீர் தேங்கியிருக்கும். இவற்றை பராமரித்தால் மட்டுமே வண்டலூர் பூங்காவின் நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாக இருக்கும் என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூர் வாரி ஆழப்படுத்தப்பட்டன. இந்நிலையில், எதிர்வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.பணிகள் குறித்து விளக்கிய பூங்கா அதிகாரி ஒருவர், ''வண்டலூர் பூங்காவின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளை பராமரிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு, ஒன்றரை லட்சம் செலவில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டு, முடியும் தறுவாயை எட்டியுள்ளன.மழை காலத்தில் கிடைக்கும் மழை நீரை, நீர் நிலைகளில் சேமித்து வைப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் பூங்கா தேவைக்கான நீர் கிடைக்கும் என்பதோடு, பூங்காவின் சூழலும் குளிர்ச்சியாக இருக்கும். இது, பார்வையாளர்களுக்கும், விலங்குகளுக்கும் கோடையால் ஏற்படும் களைப்பை போக்கும்'' என்றார்.வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை நகரின் மிகச் சிறந்த பொழுது போக்குமிடமாக திகழ்கிறது. சென்னை மட்டுமல்லாமல், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோரும், அண்டை மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சமீப காலமாக வண்டலூர் பூங்காவிற்கு அதிகமாக வருகின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,350க்கும் மேற்பட்ட ஊர்வன, பறப்பன மற்றும் விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. வார நாட்களில் 3,000, விடுமுறை நாட்களில் ஆறு முதல் 10 ஆயிரம் என்ற அளவில் பார்வையாளர்கள் வருகின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், பூங்காவின் ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு 18 லட்சமாக உயர்ந்தது. இந்த ஆண்டு 22 லட்சமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



எஸ்.உமாபதி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us