கங்கை நதிபற்றி இழிவு பிரசாரம்: ஆஸி., ரேடியோவுக்கு குவிகிறது கண்டனம்
கங்கை நதிபற்றி இழிவு பிரசாரம்: ஆஸி., ரேடியோவுக்கு குவிகிறது கண்டனம்
கங்கை நதிபற்றி இழிவு பிரசாரம்: ஆஸி., ரேடியோவுக்கு குவிகிறது கண்டனம்
ADDED : ஆக 01, 2011 09:50 PM
மெல்போர்ன்: 'இந்தியா ஒரு மலக் குழி; கங்கை நதி ஒரு சாக்கடை' என இந்தியாவைப் பற்றி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானொலி நிலையம் ஒன்று, தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளது.
தன் செயலுக்கு அந்த வானொலி நிலையமும், விமர்சனம் செய்த நிகழ்ச்சித் தொகுப்பாளரும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஆஸ்திரேலிய இந்தியர்கள் கோரியுள்ளனர்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானொலி நிலையத்தில், சமீபத்தில், ஒலிபரப்பான 'கைல் அண்டு ஜேக்கி ஓ' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் கைல் சாண்டிலேண்ட்ஸ் என்பவர்,'இந்தியா ஒரு மலக் குழி. கங்கை நதி ஒரு சாக்கடை' எனக் கிண்டல் செய்துள்ளார்.இதையடுத்து, ஆஸ்திரேலிய இந்தியர்கள், சாண்டிலேண்ட்ஸ் மற்றும் சம்பந்தப்பட்ட வானொலி நிலையம் இருவரும் இவ்விவகாரத்தில், மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக, 'இந்திய ஆஸ்திரேலியர்கள் கவுன்சில்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:இந்தியாவைப் பற்றியும், இந்துக்களின் புனித நதியான கங்கையைப் பற்றியும் சாண்டிலேண்ட்ஸ் இழிவாக விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனம், இந்துக்களின் சமயச் சடங்குகளை கேலிக்குள்ளாக்கியுள்ளன.அதனால் சம்பந்தப்பட்ட வானொலி நிலையமும், சாண்டிலேண்ட்சும், ஆஸ்திரேலிய இந்தியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால், இவ்விவகாரத்தை, வானொலி ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துச் செல்வோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ஆஸ்திரேலியர்கள் கவுன்சில் தலைவர் யது சிங் கூறுகையில்,'ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர் சமூகம், அமைதியான சகிப்புத் தன்மை கொண்ட சமூகம். அது, பிற நாட்டையோ, நாட்டவரையோ, மதச் சடங்குகளையோ விமர்சித்ததில்லை. அதேபோல், பிறர் தங்களைப் பற்றி விமர்சிக்கும் போது, அதை ஏற்றுக் கொள்வதுமில்லை' என்றார்.