Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரேஸ்கோர்ஸ் பகுதியில் அப்பட்டமான ஆக்கிரமிப்பு!

ரேஸ்கோர்ஸ் பகுதியில் அப்பட்டமான ஆக்கிரமிப்பு!

ரேஸ்கோர்ஸ் பகுதியில் அப்பட்டமான ஆக்கிரமிப்பு!

ரேஸ்கோர்ஸ் பகுதியில் அப்பட்டமான ஆக்கிரமிப்பு!

ADDED : செப் 29, 2011 10:16 PM


Google News
கோவை : ரேஸ்கோர்ஸ் பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்கான மைதானத்தில், புதிதாக பெட்டிக்கடை வைத்து ஆக்கிரமிப்பு நடந்துள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள நடைபாதையில், தினமும் காலை, மாலையில் பல ஆயிரம் பேர் 'வாக்கிங்' செல்கின்றனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில், கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வணிக கட்டடங்கள் முளைத்து விட்டன; அதற்காக, அங்கிருந்த ஏராளமான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. நடைபாதையை ஒட்டிய பூங்காக்களை விளம்பர விளக்குகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த விளம்பரங்களை வைப்பதற்கு ஈடாக, அங்குள்ள நடைபாதை மற்றும் பூங்காக்களை பராமரிக்க வேண்டுமென்பதே ஒப்பந்தம். அதுவும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், கோவை மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே, இந்தப் பகுதியில் ஏராளமான தள்ளு வண்டிக்கடைகள் புற்றீசலாகப் புறப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அங்குள்ள சிறுவர் பூங்காவுக்கும், 'வாக்கிங்' செல்லவும் ஏராளமான மக்கள் வருவதால் அந்த நாட்களில் எக்கச்சக்கமான கடைகள் முளைத்து விடுகின்றன. இதனால், அந்தப் பகுதியே குப்பை மயமாகி விடுகிறது. இவற்றைத் தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் கிடைக்கிற 'மாமூலை' வாங்கிக் கொண்டு, புதிய கடைகளை அனுமதித்து வருவதால், ரேஸ்கோர்ஸ் பகுதியும் சந்தைக்கடை போல மாறி வருகிறது. இருப்பினும், இந்த கடைகள் எதுவும் அதே இடங்களில் நிரந்தரமாக வைக்க அனுமதிக்கப்படவில்லை என்பதே ஒரே ஆறுதலாக இருந்தது. அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிரந்தர ஆக்கிரமிப்பும் புதிதாக முளைத்துள்ளது. நிர்மலா பள்ளியின் காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள இடத்தில், இளைஞர் கள் பலரும் உடற்பயிற்சி செய்வதற்காக 'பார்' கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை ஆக்கிரமித்து புதிதாக பெட்டிக்கடை வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான அந்த இடத்தை அப்பட்டமாக ஆக்கிரமித்து, பெட்டிக்கடை வைத்து ஒரு வாரமாகியும் இதுவரை அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாலை நேரத்திலேயே அங்கு டீ, காபி, பீடி, சிகரெட் வியாபாரம் ஆரம்பமாகி விடுகிறது. பெட்டிக்கடைக்கு அருகிலேயே அந்த 'பார்' கம்பிகள் இருப்பதால் யாரும் அதில் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. ஆளும்கட்சியினரின் பரிந்துரையில் இந்த கடை வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனை அனுமதிக்கும்பட்சத்தில், அப்பகுதி முழுவதும் விரைவில் ஆக்கிரமிக்கப்படுவது நிச்சயம். அதன் பின், ரேஸ்கோர்ஸ் பகுதியின் தனித்தன்மை மெல்ல மெல்ல அழிந்து விடும். இந்த விஷயத்தில், கலெக்டர் உடனடியாகத் தலையிட்டு, அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டியது அவசர அவசியம். மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் கிருஷ்ணகுமாரிடம் கேட்டபோது, ''அந்த ஆக்கிரமிப்பு பற்றி எனது கவனத்துக்கு வரவில்லை; தேர்தல் பணியில் அலுவலர்கள் உள்ளனர். இன்னும் 2 நாட்களுக்குள் அதனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us