ADDED : ஜூலை 13, 2011 10:30 PM
பெரியகுளம் : கண்மாய்களில் புதிய ஷட்டர்கள் அமைக்க வேண்டும் என தென்கரை விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பெரியகுளம் சோத்துப்பாறை அணையிலிருந்து ராஜவாய்க்கால் வழியாக பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் பெரியகுளம் கண்மாய், பாப்பையன்பட்டி கண்மாய், தாமரைக்குளம் கண்மாய்களுக்கு செல்கிறது. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை விவசாயங்கள் செய்யப்படுகின்றன. மூன்று கண்மாய்களிலும் ஷட்டர் பழுதடைந்துள்ளதால் சோத்துப்பாறைஅணை நீர் ஒரே கண்மாய்க்கு செல்வதால் மற்ற கண்மாய்களை நம்பியுள்ள பயிர்கள் நீரில்லாமல் சேதமடைகின்றன. இதே போல் சோத்துப்பாறை அணையிலிருந்து நேரடி பாசனம் பெறும் புதுஅணை, ஒட்டணை, குடமுருட்டி அணை, எரம்படி ஆகிய நான்கு கண்மாய்களை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. ஜட்டர் பழுது காரணமாக தண்ணீர் தேக்கி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. கண்மாய்களின் ஏழு ஜட்டர்களை மாற்றி, புதிய ஷட்டர்கள் அமைக்க வேண்டும் என தென்கரை விவசாயிகள் சங்கம் தலைவர் கோவிந்ததொண்டைமான், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயமணி மற்றும் உறுப்பினர்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்தனர்.


