உள்ளாட்சி தேர்தல்: போட்டோவுடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு : மதுரையில் 20 லட்சம் வாக்காளர்கள்
உள்ளாட்சி தேர்தல்: போட்டோவுடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு : மதுரையில் 20 லட்சம் வாக்காளர்கள்
உள்ளாட்சி தேர்தல்: போட்டோவுடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு : மதுரையில் 20 லட்சம் வாக்காளர்கள்
ADDED : செப் 21, 2011 01:09 AM
மதுரை: மதுரையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முதன்முறையாக போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 20.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் சகாயம் கூறியதாவது: மாவட்டத்தில் ஊரக அளவில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 589 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 607 பெண் வாக்காளர்கள் உள்ளனர். பேரூராட்சி வாக்காளர்களில் 44 ஆயிரத்து 609 பேர் ஆண்கள், 44 ஆயிரத்து 671 பேர் பெண்கள். நகராட்சி வாக்காளர்களில் 43 ஆயிரத்து 209 பேர் ஆண்கள், 44 ஆயிரத்து 812 பேர் பெண்கள் உள்ளனர்.
மாநகராட்சி வாக்காளர்களில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 431 பேர் ஆண்களும், 4 லட்சத்து 94 ஆயிரத்து 73 பேர் பெண்களும் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 18 ஆயிரத்து 838 ஆண்களும், 10 லட்சத்து 17 ஆயிரத்து 163 பேர் பெண்கள் என மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து ஒருவர் வாக்காளர்களாக உள்ளனர்.
இப்பட்டியல் ஊராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் முதல்நாள் வரை, வாக்காளர் பெயரை பட்டியலில் சேர்க்க, நீக்க மனு செய்யலாம். சேர்த்தலுக்கு படிவம் எண் 6, நீக்கலுக்கு 7, திருத்தம் செய்ய 8ஏ படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் வழங்க வேண்டும்.
தேர்தல் அதிகாரிகளாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட கமிஷனர்களும், பேரூராட்சிகளுக்கு செயல் அலுவலர்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கு இணை இயக்குனர் அந்தஸ்து அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குனர் நிலை அதிகாரிகளும், ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலையொட்டி நகர்ப்புறங்களில் 3282 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படும், என்றார். திட்ட இயக்குனர் பிரபாகரன், நேர்முக உதவியாளர் வரலட்சுமி உட்பட உடனிருந்தனர்.