Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கிட்னி தானம் செய்தவருக்கு கொலை மிரட்டல்

கிட்னி தானம் செய்தவருக்கு கொலை மிரட்டல்

கிட்னி தானம் செய்தவருக்கு கொலை மிரட்டல்

கிட்னி தானம் செய்தவருக்கு கொலை மிரட்டல்

ADDED : ஜூலை 12, 2011 12:23 AM


Google News
திருச்சி: 'கிட்னியை தானம் செய்ததுக்கு, மருத்துவ நிவாரணம் கேட்டால், 'சுட்டு கொலை செய்துவிடுவேன்' என, கிட்னி தானம் செய்ய காரணமான டாக்டர் என்னை மிரட்டுகிறார்' என, கிட்னி விற்ற கூலித்தொழிலாளி, திருச்சி டி.ஆர்.ஓ.,விடம் புகார் தெரிவித்தார்.தஞ்சை மாவட்டம், பாபநாசம், திருவைக்காவூரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பட்டுப்பிள்ளை (45).

இவருக்கு அபூர்வம் என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தினக்கூலியான இவர், குடும்ப பாரம் தாங்க முடியாமல் சவுதி சென்றார். இதற்காக ஊர் முழுவதும் கடன் வாங்கினார். ஆனால், அங்கு சரியான வேலை கிடைக்காததால், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால், என்ன செய்வது என தெரியாமல் குழப்பமடைந்தார். திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் விற்பனை செய்வது குறித்து கேள்விப்பட்ட அவர், தனது கிட்னியை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து, திருச்சியை சேர்ந்த டாக்டர் வேல்அரவிந்த் அறிமுகம் கிடைத்தது. டாக்டர் வேல்அரவிந்த் மூலம் பலர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். கடந்த 2003 ஆகஸ்ட் 7ம் தேதி பட்டுப்பிள்ளைக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 'சீஹார்ஸ்' (தற்போது கே.எம்.சி., ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கவுதம் என்பவருக்கு கிட்னி தானமாக வழங்கப்பட்டது. இதற்காக 3 லட்சம் வரை பேரம் பேசப்பட்டது. ஆனால், பேசியபடி பட்டுப்பிள்ளைக்கு பணம் கிடைக்கவில்லை. மேலும், பணம் கேட்டு சென்ற அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவதாக, மற்றொரு டாக்டர் ராதாகிருஷ்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பட்டுப்பிள்ளை திருச்சி டி.ஆர்.ஓ., பேச்சியம்மாளிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: டாக்டர் வேல்அரவிந்த் மூலமாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கவுதம் என்பவருக்கு கிட்னியை தானம் செய்தேன். மருத்துவம் மற்றும் குடும்ப செலவுக்கு மூன்று லட்சம் ரூபாய் தருவதாக கூறிவிட்டு, ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தனர். பாக்கி தொகையை தராமல் ஏமாற்றி விட்டனர். இதுதொடர்பாக ஏ.பி.சி., மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் வேல்அரவிந்தனிடம் கேட்டு எட்டு ஆண்டாக அலைகிறேன். தொடர்ந்து பணம் கேட்டதால், அவரது கூட்டாளி டாக்டர் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து, 'உன்னை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவோம்' என, மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக திருச்சி கமிஷனரிடம் கடந்த 2009ம் ஆண்டு புகார் அளித்தேன். சம்பந்தப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமிக்கு உறவினர் என்பதால், இருவர் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us