/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கண்டம்பாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு கிடைத்தது: சிலிண்டர் வருமா?கண்டம்பாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு கிடைத்தது: சிலிண்டர் வருமா?
கண்டம்பாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு கிடைத்தது: சிலிண்டர் வருமா?
கண்டம்பாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு கிடைத்தது: சிலிண்டர் வருமா?
கண்டம்பாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு கிடைத்தது: சிலிண்டர் வருமா?
ADDED : ஆக 22, 2011 12:17 AM
விழுப்புரம் : கண்டம்பாக்கம் ஊராட்சியில் இலவச காஸ் அடுப்பு கொடுத்த
நிலையில் சிலிண்டர்கள் வழங்காமல் உள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியில் இலவச காஸ் அடுப்புகள்
வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல் வந்ததையடுத்து அனைத்து கிராமங்களுக்கும்
இலவச காஸ் அடுப்பு வழங்கிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
விழுப்புரம் தொகுதியில் அப்போதைய அமைச்சர் பொன்முடி இலவச காஸ் அடுப்புகளை
கிராமங்களுக்கே சென்று வழங்கினார். இந்த வகையில் கண்டம்பாக்கம், மரகதபுரம்,
கண்டமானடி, கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் இலவச காஸ்
அடுப்பு வழங்கும் திட்டத்தில் அடுப்புகளை வழங்கிச் சென்றார். அதன் பின்
சட்டசபை தேர்தல் வந்ததால் கண்டம்பாக்கம், மரகதபுரம் உள்ளிட்ட கிராமங்களில்
காஸ் அடுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு, சிலிண்டர்கள் வழங்காமல் கிடப்பில்
போடப்பட்டது. தேர்தலுக்குப் பின் நிலுவையில் இருந்த பகுதிகளில் அந்தந்த
ஊராட்சி நிர்வாகத்தினர் சிலிண்டர்களை பெற்று கொடுத்தனர். இதில் தற்போது வரை
சிலிண்டர்கள் கிடைக்கப் பெறாத கண்டம்பாக்கம் ஊராட்சி மக்கள் புலம்பி
வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட
கண்டம்பாக்கம், திருப்பச்சாவடிமேடு மக்கள் 900 பேருக்கு காஸ் அடுப்புகள்
வழங்கும் திட்டப்படி தேர்தலுக்கு முன் அடுப்புகள் மட்டும் வழங்கப்பட்டது.
காஸ் கனெக்ஷனுடன் சிலிண்டர்களை தேர்தல் முடிந்ததும் தருவதாக கூறினர்.
தேர்தலுக்கு பின் சுற்றுப்பகுதி கிராமங்களில் காஸ் சிலிண்டர்கள்
வழங்கப்பட்டது. ஆனால் கண்டம்பாக்கத்திற்கு இது வரை சிலிண்டர்கள் தராமல்
இழுத்தடிக்கின்றனர். காஸ் ஏஜென்சியில் கேட்டால், உங்களுக்கு காஸ் ஒதுக்கீடு
இல்லை, பணம் செலுத்தி புதிய இணைப்பு வாங்கிக் கொள்ளுங்கள் என
தெரிவிக்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சிலிண்டர் கிடைப்பது கடினம்
என கைவிரித்துவிட்டதாக மக்கள் புலம்பினர். இது குறித்து அதிகாரிகள்
தரப்பில் கூறும்போது., கண்டம்பாக்கத்திற்கு காஸ் இணைப்பிற்கு அனுமதி
வந்திருந்தது. ஊராட்சித் தரப்பினர் பணம் செலுத்தி வாங்காமல் அலட்சியமாக
விட்டுவிட்டனர். இடையே தேர்தல் வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின் ஆட்சி மாற்றம் வந்ததால் சிலிண்டர் வழங்க முடியாமல் போனதாக
தெரிவித்தனர். இதனால் சிலிண்டர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் கண்டம்பாக்கம்
மக்கள் காத்திருக்கின்றனர்.


