ADDED : ஆக 14, 2011 10:50 PM
கோவை : ஆயுதப்படை மையத்தில் சமையல் காஸ் வினியோக முறைகேட்டில் ஈடுபட்டு, பினாமி பெயரில் சொத்து வாங்கி குவித்த போலீஸ் ஏட்டு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.
கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் குடியிருப்புகள் மற்றும் மத்திய சிறைக்கு காஸ் வினியோகம் செய்யும் மையம் உள்ளது. இம்மையத்தின் பொறுப்பாளராக ஏட்டு ஜான்பால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், காஸ் வினியோகத்தில் முறைகேடு நடப்பதாகவும், இதன்மூலம் பல லட்சம் ரூபாய் கையாடப்படுவதாகவும் புகார் எழுந்தது. இப்புகார் பற்றி உதவி கமிஷனர் தலைமையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, கமஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், போலீஸ் குடும்பங்களுக்கு வினியோகிக்கப்படும் சிலிண்டர்களில் பாதியை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்ததும், சிலிண்டர் பெறாத போலீசாரின் பெயரை பதிவு செய்து சிலிண்டர்களை விற்பனைக்கு விடுவது, சிறைக்கு அனுப்ப வேண்டிய 70 சிலிண்டர்களில் பாதியை மட்டும் அனுப்பி வைப்பது, பயிற்சி இல்லாத நாட்களில் பயிற்சி நடந்ததாக போலி கணக்கெழுதி சிலிண்டர்களை கடத்துவது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டன. குழு விசாரணையில், முறைகேடாக கணக்கெழுதி கடத்தப்படும் காஸ் சிலிண்டர்கள் ஓட்டல், வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் டீலர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதும், இதில் கிடைத்த பெரும் தொகையைக் கொண்டு பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்து வாங்கி குவித்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஏட்டு ஜான்பால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இச்சூழலில் ஏட்டு மீதான மோசடி பற்றிய முழு அறிக்கை தயாரிக்கப்பட்டு, சமீபத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வறிக்கையை பரிசீலித்த போலீஸ் கமிஷனர், தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த ஏட்டு ஜான்பாலை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டார்.