ADDED : செப் 12, 2011 03:19 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே 'மைனர்' பெண் மற்றும் ஆணுக்கு நடக்க இருந்த
திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு
திட்ட தன்னார்வலர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர் அருகே உள்ள பெரிய கல்ராயன் மலை கீழ்பூண்டி
கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் துரைசாமி. இவர், கற்கும் பாரதம்
திட்டத்தில் கிராம ஒருங்கிணைப்பாளராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள்
பாதுகாப்பு திட்ட தன்னார்வலராகவும் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 6ம் தேதி,
குண்ணூர் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் இளையராஜா (17) என்பவருக்கும்,
ஆறுமுகம் மகள் பவுனமதி (16) என்பவருக்கும், கடந்த 8ம் தேதி நடக்க இருந்த
மைனர் திருமணத்தை, ஆத்தூர் தாசில்தார் லியாகத் அலிகான் தடுத்து
நிறுத்தினார்.அதையறிந்த இரு வீட்டாரும், ஒருங்கிணைப்பாளர் துரைசாமியை
அழைத்து, திருமணம் தடைப்பட்டது குறித்து கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளனர்.
தொடர்ந்து, துரைசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, தந்தை சின்னதம்பி, தாய்
கரியம்மாள் ஆகிய நால்வரையும் தாக்கி, தீ வைத்து எரிப்பதாக மிரட்டல்
விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கடந்த 7ம் தேதி கரியகோவில் போலீஸில் துரைசாமி
உள்ளிட்ட குடும்பத்தினர் புகார் செய்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீஸ் அனுமதி
சீட்டு இல்லாததால், அட்மிஷன் செய்ய மறுத்து அனைவரையும் திருப்பி
அனுப்பியுள்ளனர்.இந்நிலையில், கரியகோவில் போலீஸார், துரைசாமி கொடுத்த
புகாரின் பேரில் எவ்வித நடவடிககையும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர். அதனால்,
பாதிக்கப்பட்ட துரைசாமி, கடந்த 8ம் தேதி, மாவட்ட கலெக்டர் மற்றும்
எஸ்.பி.,யிடம், உயிருக்கு பாதுகாப்பு கேட்டு புகார் மனு
கொடுத்தார்.அதையடுத்து, கரியகோவில் போலீஸார், கீழ்பூண்டி கிராமத்தை சேர்ந்த
பொதுமக்களை மிரட்டி, துரைசாமி உள்ளிட்ட குடும்பத்திரை, குண்ணூர் கிராமத்தை
சேர்ந்த திருமண கோஷ்டியினர் யாரும் தாக்கவில்லை என, எழுதி வாங்கியதாக
கூறப்படுகிறது.இச்சூழலில், போலீஸாரிடம் கெடுபிடி செய்து, திருமண
கோஷ்டியினர் மீது வழக்கு பதிவு செய்தால், கீழ்பூண்டி கிராமத்தை சேர்ந்த
ஊர்க்கவுண்டர், கங்காணி ஆகியோர் கட்டப்பஞ்சாயத்து மூலம் துரைசாமி உள்ளிட்ட
குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்போவதாக பாதிக்கப்பட்ட துரைசாமி
தெரிவிக்கிறார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட தன்னார்வலர்
துரைசாமியை தாக்கிய திருமண கோஷ்டியினர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட
கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும், கரியகோவில் போலீஸார் நடவடிக்கை
மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.