கடைசி ஓவரில் வீழ்ந்தது சென்னை கிங்ஸ் : மும்பை அணி "திரில்' வெற்றி
கடைசி ஓவரில் வீழ்ந்தது சென்னை கிங்ஸ் : மும்பை அணி "திரில்' வெற்றி
கடைசி ஓவரில் வீழ்ந்தது சென்னை கிங்ஸ் : மும்பை அணி "திரில்' வெற்றி
ADDED : செப் 25, 2011 12:45 AM

சென்னை: மலிங்காவின் அதிரடி கைகொடுக்க, சாம்பியன்ஸ் லீக் போட்டியில், மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. பவுலிங்கில் சொதப்பியதால் சென்னை அணி, கடைசி ஓவரில் வீழ்ந்தது. இந்தியாவில் 3வது சாம்பியன்ஸ் லீக் தொடர் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்தித்தது. காயம் காரணமாக சச்சின் பங்கேற்காததால், மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்பஜன் சிங் ஏற்றார். 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பேட்டிங்' தேர்வு செய்தார். விஜய் ஏமாற்றம்: சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து துவக்கம் கொடுத்தனர். மலிங்கா வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. தடுமாறிய முரளி விஜய் 8 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றினார்.
ரன்வேகம் மந்தம்: அடுத்து வந்த ரெய்னா, சைமண்ட்ஸ் மற்றும் அகமது பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் 18 ரன்கள் எடுத்த நிலையில் போலார்டு பந்தில் 'ஸ்டம்டு' ஆனார். பின் வந்த பத்ரிநாத், வழக்கம் போல 'நிதான'
ஆட்டத்தை வெளிப் படுத்த, அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. ஹசி அதிரடி: மறுபுறம் ஹசி அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை தந்தார். சாகல், ஹர்பஜன் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்திய இவர், மலிங்காவையும் விட்டுவைக்கவில்லை. இவரது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ஹசி, 'டுவென்டி-20' அரங்கில் 12வது அரைசதம் கடந்தார். பத்ரிநாத் (16) நீடிக்கவில்லை. 57 பந்துகளில் 81 ரன்கள் (3 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்த நிலையில் ஹசி, பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் அதிரடியில் ஈடுபட்டார் தோனி. சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தோனி (22), மார்கல் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுமாரான துவக்கம்: சற்று கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, ஜேக்கப்ஸ், பிளிஜார்டு சுமாரான துவக்கம் தந்தனர். ஜேக்கப்ஸ் 18 ரன்கள் எடுத்த போது, அஷ்வின் சுழலில் சிக்கினார். ரெய்னாவின் முதல் ஓவரில் பிளிஜார்டு (28) போல்டானார். கடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய அம்பதி ராயுடு (5) விரைவில் அவுட்டானார்.
கைவிட்ட போலார்டு: அடுத்து வந்த சுமனும் (5), 'அனுபவ' சைமண்ட்ஸ் (3) வெளியேற மும்பை அணி 63 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அஷ்வின் ஓவரில், தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சதீஷ் (14) அவரிடமே வீழ்ந்தார். போலார்டும் (22), அணியை பாதியில் கைவிட்டார்.
மலிங்கா அபாரம்: எட்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்பஜன், மலிங்கா ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜகாதியின் ஓவரில் மலிங்கா அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடிக்க, போட்டியின் முடிவு தலைகீழானது.
'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. போலிஞ்சர் வீசிய ஒவரின் முதல் பந்தில், ஹர்பஜன் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசிய மலிங்கா. மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்தில் ஹர்பஜன் தன்பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாச, ஸ்கோர் சமன் ஆனது.
ஐந்தாவது பந்தில் ஹர்பஜன் ஒரு ரன் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து, 'திரில்' வெற்றி பெற்றது. மலிங்கா (37), ஹர்பஜன் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.